குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஜூன் 12 அன்று, குவைத்தின் மங்காப் நகரில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் அதிகபட்சமாக 23 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். மற்ற 22 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர், ஆந்திரப் பிரதேசம், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தலா 3 பேர் மற்றும் பீகார், ஒடிசா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர். மற்றொருவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
இன்று காலை, உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் இந்தியா வந்தடைந்தது.
அதிகபட்சமாக 23 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், விமானம் கேரளாவின் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன் பிறகு விமானம் டெல்லி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்களை கொச்சி வழியாக தமிழ்நாட்டிற்கு எடுத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.5 லட்சம் நிவாரணம்
இதனிடையே, குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதேபோல், கேரள மாநிலத்தை சேர்ந்த 23 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ரூ. 2 லட்சம் நிவாரணம்
முன்னதாக, உயிரிழந்த 45 இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும், தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Tamil Nadu CM MK Stalin, Kerala CM Pinarayi Vijayan, PM Modi, Kuwait Fire Accident Victims