குவைத் தீ விபத்து: உயிரிழந்தோருக்கு ரூ.8 லட்சம், 4 ஆண்டு சம்பளம் நிவாரணம்-NBTC நிறுவனம்
குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.8 லட்சம் மற்றும் 4 ஆண்டு சம்பளம் இழப்பீடாக வாங்கப்படும் என NBTC நிறுவனம் அறிவித்துள்ளது.
NBTC குழுமத்தின் எம்.டி., கே.ஜி. ஆபிரகாம் இதனை அறிவித்துள்ளார்.
குவைத்தின் மங்காப் நகரில் புதன்கிழமை (ஜூன் 12) NBTC Group நிறுவனத்தில் வேலைபார்க்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை, 46 இந்தியர் உட்பட மொத்தம் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தீ விபத்து நடந்து மூன்று நாட்கள் கழித்து இன்று உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த, NBTC குழுமத்தின் எம்.டி., கே.ஜி. ஆபிரகாம், இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றும், மிகவும் வருந்துவதாகவும் கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நிறுவனம் கவனித்துக் கொள்ளும் என்றும் கூறினார்.
பேரழிவை ஏற்படுத்திய இந்த விபத்தை நினைத்து வீட்டில் அழுது கொண்டிருந்ததாகவும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்களை தனக்கு நன்கு தெரியும் என்றும் 27 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுடன் பணிபுரிபவர்கள் என்றும் அவர் கூறினார்.
தனது நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் மேலாளர்கள் தற்போது இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்து தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருவதாக ஆபிரகாம் கூறினார்.
"எங்கள் பங்கில் எந்த தவறும் இல்லை, ஆனால் நாங்கள் பொறுப்பேற்கிறோம். அவர்கள் எங்களுடன் வாழ்ந்து, வேலை செய்தனர். அவர்கள் நிறுவனத்தை கட்டினார்கள். அவர்கள் எங்கள் குடும்பம்," என்று ஆபிரகாம் கூறினார்.
இழப்பீட்டுத் தொகையை வழங்குவது தொடர்பாக தூதரகங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றார்.
ஆபிரகாம் கட்டிடத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
குத்தகைக்கு விடப்பட்ட கட்டிடத்தில் தலா மூன்று படுக்கையறைகள் கொண்ட 24 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளதாகவும், சுமார் 160 ஊழியர்கள் மட்டுமே அங்கு தங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.
கட்டிடம் அவ்வளவு பழமையானது அல்ல என்றும் அதன் ஊழியர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு இலவசம் என்றும் ஆபிரகாம் கூறினார்.
விபத்து காரணமாக உயிரிழப்பதால், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நான்கு ஆண்டு ஊதியம் பெறப்படும் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Kuwait Fire, NBTC Group, Victims