ரஷ்யா ஏவிய 5 பாலிஸ்டிக் ஏவுகணைகள்: உக்ரைனிய ராணுவம் காட்டிய அதிரடி
ரஷ்யா ஏவிய 5 பாலிஸ்டிக் ஏவுகணைகளை உக்ரைன் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
உக்ரைனிய தலைநகர் கீவ்வை குறிவைத்து ரஷ்யா ஏவிய 5 பாலிஸ்டிக் ஏவுகணைகளை உக்ரைனிய விமானப்படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளது.
இருப்பினும் சில ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் உக்ரைனிய படைகளின் வான் பாதுகாப்பு வளையத்தை தாண்டி விழுந்து இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய நடத்திய இந்த திடீர் தாக்குதலில், தலைநகரில் உள்ள இரண்டு கிடங்குகள் தீப்பிடித்துள்ளது மற்றும் பள்ளி கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளது என அந்நகர மேயர் கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தாக்குதலானது உக்ரைனிய படைகளின் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தயாரிக்கும் ராணுவ உற்பத்தி ஆலையை குறிவைத்து நடத்தப்பட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
ட்ரோன்களை விட பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீழ்த்துவது சவாலான நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் முதல்முறையாக பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக வீழ்த்தி இருப்பதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் தெரிவித்துள்ள தகவலின் படி, 25 ரஷ்ய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் உக்ரைனின் 17 இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் இடை மறிக்கப்பட்ட ஏவுகணை பாகங்கள் மட்டும் கிட்டத்தட்ட 10 இடங்களில் விழுந்துள்ளது.
ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக உக்ரைன் அமெரிக்காவின் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தும் நிலையில், அதன் தற்போதைய உலகளாவிய தேவைகளின் அதிகரிப்பால், உக்ரைனுக்கு வெடிமருந்து கிடைப்பதில் சவால் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் குளிர்காலத்திற்கு முன்பாக உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதில் உக்ரைன் தீவிரம் காட்டி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |