18 பவுண்டரிகள்! மிரட்டலான சதம் விளாசிய வீரர்.. வங்கதேசத்தை வெளுத்து வாங்கும் மே.தீவுகள்
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் மேயர்ஸ் மிரட்டலாக சதம் விளாசினார்.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி செயிண்ட் லூசியாவில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்சில் ஆடிய வங்கதேச அணி 234 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக லித்தன் தாஸ் 53 ஓட்டங்களும், தமிம் இக்பால் 46 ஓட்டங்களும் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் தரப்பில் சியல்ஸ் மற்றும் அல்சாரி ஜோசப் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில், கேப்டன் பிராத்வெயிட் 51 ஓட்டங்கள், காம்ப்பெல் 45 ஓட்டங்கள் என நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தனர். பிளாக்வுட் 40 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, நங்கூரமாய் நின்று ஆடிய கைல் மேயர்ஸ் டெஸ்டில் தனது இரண்டாவது சதத்தினை பதிவு செய்தார். அவரது ஆட்டத்தினால் மேற்கிந்திய தீவுகள் அணி 408 ஓட்டங்கள் குவித்தது. மேயர்ஸ் 18 பவுண்டரிகள், 2 சிக்ஸர் விளாசி 146 ஓட்டங்கள் எடுத்தார்.
வங்கதேச அணியின் தரப்பில் காலித் அகமது 5 விக்கெட்டுகளையும், மெஹிடி ஹாசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்சை தொடங்கிய வங்கதேசம், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்கள் எடுத்தது. ஹொசைன் ஷாண்டோ 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நுருல் ஹசன் 16 ஓட்டங்களுடனும், மெஹிடி ஓட்டங்கள் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். கெமர் ரோச் 3 விக்கெட்டுகளையும், அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
வங்கதேசம் 42 ஓட்டங்கள் பின்தங்கியுள்ள நிலையில், இன்று நான்காவது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.