பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக ஸ்டார்மர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!
பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த பலர், ஐந்து ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்து, வேலை செய்து, இன்னும் சில மாதங்களில் தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கிடைத்துவிடும் என ஆவலுடன் காத்திருக்கும் நேரத்தில், அவர்கள் தலையில் இடியாய் இறங்கியது, உள்துறைச் செயலரின் அறிவிப்பு ஒன்று!
ஆம், புலம்பெயர்ந்தோர் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற ஐந்து ஆண்டுகள் அல்ல, இனி 10 ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்னும் புதிய விதியை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தார் பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத்.
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை
ஷபானாவின் அறிவிப்பால், புலம்பெயர்ந்தோர் பலர் கடும் ஏமாற்றத்தை எதிர்கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில், அந்த புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக ஆளும் லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட, சுமார் 100 பேர் ஷபானாவுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்கள்.
அதாவது, ஏற்கனவே பிரித்தானியாவில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்தோரை ஷபானாவின் புதிய புலம்பெயர்தல் விதிகள் பாதிக்கக்கூடாது என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
லேபர் கட்சியைச் சேர்ந்த 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்ற கட்சிகளைச் சேர்ந்த 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 33 தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், ஷபானாவுக்கு எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள்.
லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஷபானாவின் இந்த திட்டம் பிரித்தானியாவுக்கு உகந்தது அல்ல என்றும், நியாயமற்றது என்றும் கூறியுள்ளார்கள்.
அதேபோல, பிரித்தானியாவின் மிகப்பெரிய வர்த்தக யூனியனான Unisonஇன் தலைவரான ஆண்ட்ரியா (Andrea Egan) என்பவரும், பிரித்தானியர்கள் நியாயத்தை நம்புகிறார்கள்.

நீங்கள் விதிகளை பின்பற்றினால், கடினமாக உழைத்தால், நாட்டுக்கு உங்களால் நன்மை ஏற்படுமானால், அரசு உங்கள் மீது அக்கறை காட்டும் என்பதை பிரித்தானிய மக்கள் நம்புகிறார்கள்.
அப்படியிருக்கும்போது, புதிய விதிகள், கடினமான சூழலின் நடுவிலும், குறைந்த ஊதியமே பெற்றும், நமது அன்பிற்குரிய முதியவர்களை அன்புடனும் கௌரவத்துடனும் கவனித்துக்கொண்ட பணியாளர்கள் முதலான புலம்பெயர்ந்தோருக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஆக, அரசு, கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றவேண்டும் என்றும், பாதியில் விதிகளை மாற்றுவது சரியல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |