100 ஆண்டுகளில் மோசமான தோல்வியை சந்திக்க இருக்கும் ஆளும் லேபர் கட்சி
பிரித்தானியாவில் ஆளும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் லேபர் கட்சிக்கு மக்களிடையே ஆதரவு குறைந்துவருகிறது.

லேபர் கட்சி மக்கள் ஆதரவை கணிசமான அளவில் இழந்துள்ள நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் சற்று முன்னேற்றம் கண்டுள்ளது சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
மக்கள் ஆதரவு யாருக்கு?
Find Out Now என்னும் ஆய்வமைப்பு சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்புகளில், லேபர் கட்சிக்கு வெறும் 14 சதவிகித ஆதரவுதான் கிடைத்துள்ளது.

கருத்துக்கணிப்பில் வழக்கம்போல முன்னிலை வகிப்பவர், நைஜல் ஃபராஜ். அவரது Reform UK கட்சிக்கு மக்களிடையே 31 சதவிகித ஆதரவு உள்ளது.

கருத்துக்கணிப்பில் இம்முறை ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது, தேர்தலில் லேபர் கட்சியிடம் தோற்றுப்போன கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது.
20 சதவிகித ஆதரவுடன், மக்கள் மனதில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது கன்சர்வேட்டிவ் கட்சி.
அதைவிட முக்கியமான விடயம் என்னவென்றால், கிரீன்ஸ் கட்சியும் லேபர் கட்சியை முந்திவிட்டது. அக்கட்சிக்கு மக்களிடையே 18 சதவிகித ஆதரவு உள்ளது.
ஆய்வை மேற்கொண்ட Find Out Now ஆய்வமைப்பின் தலைவரான Tyron Surman, 100 ஆண்டுகளில் லேபர் கட்சி இந்த அளவுக்கு மோசமான நிலையை அடைந்துள்ளது இதுதான் முதல்முறை என்கிறார்.
முன்னர் ஆண்ட கன்சர்வேட்டிவ் கட்சி, புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் முதலான மக்களுடைய எதிர்பார்ப்புகள் சிலவற்றை நிறைவேற்றத் தவறியதால், லேபர் கட்சி அவற்றை நிறைவேற்றும் என நம்பித்தான் மக்கள் லேபர் கட்சிக்கு வாக்களித்தார்கள்.
ஆனால், இதுவரை இந்த ஆண்டில் மட்டும் சுமார் 30,000 புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார்கள்.
ஆக, லேபர் அரசு புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக மக்கள் கருதுகிறார்கள்.
அத்துடன், உழைக்கும் வர்க்கத்துக்கு வரிச்சுமையை அளிக்கமாட்டோம் என லேபர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்த நிலையில், தற்போதைய பட்ஜெட்டில் 13 பில்லியன் பவுண்டுகள் அளவுக்கு வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் லேபர் கட்சி அடைந்த தோல்வி, அக்கட்சியின் வீழ்ச்சியை வெளிச்சம் போட்டுக் காட்டுவது போல் அமைந்துவிட்டது.
ஆக மொத்தத்தில், லேபர் கட்சிக்கு மக்கள் ஆதரவு குறைந்துவிட்டது. அடுத்த தேர்தல் வரை இதே நிலை நீடிக்குமானால், லேபர் கட்சிக்கு கடும் ஏமாற்றமே மிஞ்சும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |