வங்கி கணக்கில் வெறும் 126 ரூபாய் இருந்த நிலையில் ரூ. 2700 கோடியை பார்த்து திக்குமுக்காடி போன நபர்! ருசிகர சம்பவம்
செங்கல் சூளையில் வேலை செய்யும் தொழிலாளி ஒருவர் சில மணி நேரங்கள் திடீர் கோடீஸ்வரராக மாறிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருபவர் பிஹாரிலால். (45). நாளொன்றுக்கு ரூ.600 முதல் ரூ.800 கூலிக்கு வேலை செய்கிறார்.
பருவமழை காரணமாக செங்கல் சூளைக்கு விடுமுறை விடப்படவே, தன்னுடைய சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்தின் கன்னூஜ் அருகே உள்ள கிராமத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு பேங்க் ஆப் இந்தியாவில் உள்ள தனது ஜன் தன் வங்கி கணக்கில் இருந்து 100 ரூபாய் எடுத்துள்ளார். சில நிமிடங்களில், அவரது மொபைல் போனுக்கு வந்த குறுஞ்செய்தியில் ரூ.2,700 கோடி பேலன்ஸ் இருப்பதாக காட்டியுள்ளது. அதனை கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்து திக்குமுக்காடி போயுள்ளார்.
india.com
உடனடியாக அருகில் உள்ள பேங்க் மித்ரா சென்று வங்கி கணக்கு இருப்பை பரிசோதித்துள்ளார். அப்போது வங்கி கணக்கில் ரூ.2,700 கோடி இருந்தது உறுதியாகி உள்ளது. இருப்பினும், அவரது மகிழ்ச்சி சிறிது காலம் நீடித்தது.
ஏனெனில் அவர் தனது கணக்கைச் சரிபார்க்க வங்கி கிளைக்கு வந்தபோது, வங்கி கணக்கில் ரூ.126 மட்டுமே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பிஹாரிலால் கூறுகையில், எனது கணக்கை மீண்டும் சரிபார்க்கும்படி அவரிடம் கேட்டேன். அதன் பிறகு அவர் அதை மூன்று முறை சரிபார்த்தார். என்னால் நம்ப முடியாமல் போனபோதும், வங்கிக் கணக்கை எடுத்து என்னிடம் கொடுத்தார். எனது கணக்கில் ரூ.2,700 கோடி கிடப்பதை பார்த்தேன் என கூறியுள்ளார்.
வங்கி அதிகாரி அபிஷேக் சின்ஹா கூறுகையில், வங்கி கணக்கை ஆய்வு செய்ததில் ரூ.126 மட்டுமே இருந்தது. இது வங்கி பிழையாக இருக்கலாம். பிஹாரி லாலின் கணக்கு சிறிது நேரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக வங்கியின் மூத்த அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.