பரபரப்பான உலகக்கோப்பை டெஸ்ட் போட்டியில் தூங்கியது ஏன்? கிண்டலாக விளக்கமளித்த அவுஸ்திரேலிய வீரர்
உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 3ஆம் நாளில் தூங்கியது குறித்து, அவுஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசாக்னே விளக்கம் அளித்துள்ளார்.
உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் மோதி வரும் உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடி வருகின்றன. இன்று 4ஆம் நாள் ஆட்டம் தொடங்கி நடந்து வருகிறது.
முன்னதாக, நேற்றைய ஆட்டத்தின்போது அவுஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அப்போது டேவிட் வார்னர் ஒரு ரன்னில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
தூங்கிய லபுசாக்னே
அடுத்து மார்னஸ் லபுசாக்னே களமிறங்க வேண்டியது. ஆனால் அவரோ பெவலியனில் தூங்கிக் கொண்டிருந்தார். வார்னரின் விக்கெட்டை கைப்பற்றியதால் இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
அந்த சத்தத்தை கேட்டு லபுசாக்னே விழித்து எழுந்தார். உடனே துடுப்பாட்டம் செய்ய அவர் களத்திற்கு வந்தார். அவர் தூங்கியதும், கண்விழித்து களத்திற்கு வந்ததும் தொலைக்காட்சி நேரலையில் காட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இதனை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் லபுசாக்னே கிண்டலடித்தனர். அதேபோல் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவும் அவரை கலாய்த்தார்.
லபுசாக்னே விளக்கம்
இந்நிலையில், தூங்கியது குறித்து லபுசாக்னே அளித்துள்ள விளக்கத்தில், 'டெஸ்ட் போட்டியின் அனைத்து பந்துகளையும் பார்க்க முடியாது. நான் அந்த பந்துகளுக்கு இடையே சிறிது நேரம் என் கண்களுக்கு ஓய்வு கொடுத்தேன். சிராஜ் முதல் விக்கெட்டாக வார்னரை வீழ்த்தி என்னுடைய ஓய்வை கெடுத்துவிட்டார்' என கிண்டலாக தெரிவித்துள்ளார்.
Sky Sports
மூன்றாம் நாளில் நீண்ட நேரம் பீல்டிங் செய்ததால் களைப்பாக காணப்பட்ட லபுசாக்னே, இந்திய அணி ஆல் அவுட் ஆனதால் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என தூங்கியுள்ளார்.
இதற்கிடையில், நான்காவது நாளான இன்று தனது துடுப்பாட்டத்தை தொடர்ந்த லபுசாக்னே 41 ஓட்டங்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.