தடுப்பூசி பெறுவதில் சிக்கல்... அதிகரிக்கும் துயரம்: மூன்றாவது இடத்திற்கு வந்த நாடு
உலக அளவில் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையில், 3-ம் இடத்துக்கு மெக்ஸிகோ வந்துள்ளது.
வட அமெரிக்கப் பிராந்தியத்தைச் சோ்ந்த மெக்ஸிகோ, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கையில் 13-ஆவது இடத்தில் இருந்தாலும், இறப்பு எண்ணிக்கையில் 3-ஆவது இடத்தை எட்டியுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,506 போ் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனா். அதையடுத்து, கொரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 155,145-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 18,670 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்துடன், மெக்ஸிகோவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 18,25,519-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மெக்ஸிகோவில், மிகக் குறைந்த விகித்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதால், அந்த நோய்க்கு பலியானவா்களின் உண்மையான எண்ணிக்கை 1.95 லட்சத்துக்கும் மேலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதனிடையே ஜனாதிபதி மானுவல் லோபஸுக்கு கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டு, அவா் தற்போது தேசிய மாளிகையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா்.
மெக்ஸிகோவில் கொரோனா நெருக்கடி தொடரும் நிலையில், நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியை அந்த நாடு பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இதுவரை 7.6 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை மட்டுமே மெக்ஸிகோ பெற்றுள்ளது. ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளையே அந்த நாடு பெரிதும் நம்பியுள்ளது.
எனினும், அந்தத் தடுப்பூசியின் 3-ஆம் கட்ட சோதனை முடிவுகளின் முழு விவரங்களையும் ரஷ்யா இன்னும் வெளியிடவில்லை. அதனால், அதன் செயல்திறன் குறித்த நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மெக்ஸிகோவில் 13,76,073 போ் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா், மேலும் 2,94,301 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 5,692 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.