கனடாவில் சடலமாக மீட்கப்பட்ட பெண்... மரபணு சோதனையால் அடையாளம் கண்ட பொலிசார்
ஒன்ராறியோ ஏரியில் கடந்த 2017ல் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் மரபணு சோதனையின் மூலமாக ரொறன்ரோ பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
விசாரணையில் புதிய திருப்பம்
கடந்த 5 ஆண்டுகாள முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் இந்த வழக்கு தொடர்பில் அறிவித்துள்ளனர். கடந்த 2017 ஆகஸ்டு மாதம் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்தனர்.
இதில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. முதற்கட்ட சோதனையில் அவர் கனடியரா அல்லது வெளிநாட்டவரா என்பது தொடர்பான குழப்பம் பொலிசாருக்கு ஏற்பட்டது. அவரிடத்தில் அடையாள அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களும் காணப்படவில்லை.
இதனையடுத்து மாதிரி புகைப்படம் ஒன்றை பொலிசார் வெளியிட்டு, பொதுமக்களின் உதவியை நாடினர். தொடர்புடைய பெண்ணிற்கு 44 முதல் 70 வயதிருக்கலாம் என்றும், ஐந்து அடி நான்கு முதல் ஐந்து அடி ஆறு அங்குலம் உயரம் இருக்கலாம் என்றும்,
பழுப்பு நிற கண்கள் மற்றும் குறுகிய நரை முடியுடன் 135 முதல் 150 பவுண்டுகள் எடையுடன் கூடிய பெண் எவர் என்றும் பொலிசார் குறிப்பிட்டனர். அத்துடன் கனடா முழுமையும் மாயமானவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
சுவிஸ் நாட்டவர் என உறுதி
ஆனால் இந்த வழக்கில் பொலிசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில், 2023 ஜனவரி மாதம் மரபணு சோதனை முன்னெடுக்க ரொறன்ரோ பொலிசார் முடிவு செய்தனர். அதில் தொடர்புடைய பெண்மணிக்கு வட அமெரிக்காவில் தூரத்து சொந்தங்கள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.
அந்த விசாரணை ஒருகட்டத்தில் சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டது. 2023 ஆகஸ்டு மாதம் ரொறன்ரோ பொலிசார் சுவிஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டனர்.
அதில் 2017 செப்டம்பர் மாதம் பெண் ஒருவர் மாயமானதாக புகார் ஒன்று பதிவாகியுள்ளதை கண்டரிந்தனர். இதனையடுத்து மரபணு சோதனை மூலமாக கிடைத்த தரவுகளுடன் ஒப்பிடுகையில், குறித்த பெண் சுவிஸ் நாட்டவர் என உறுதி செய்யப்பட்டது.
அத்துடன், அவரது உறவினர்களை கண்டுபிடித்து அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில் அந்த பெண்ணின் மரணம் குற்றச்செயல் அல்ல என்பதால் அவரது அடையாளத்தை வெளியிடவில்லை என்று ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |