வாடகை விவகாரம்... ஆறு பிள்ளைகளுடன் வீட்டைக் கொளுத்திய உரிமையாளர்
அமெரிக்காவில் வாடகைதாரர் ஒருவர் வாடகை செலுத்துவதை நிறுத்தியதால் அந்த வீட்டு உரிமையாளர் ஆத்திரத்தில் அடுக்குமாடி குடியிருப்புக்கு நெருப்பு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாடகை செலுத்தாத குடும்பம்
குறித்த பகீர் சம்பவத்தின் போது அந்த குடியிருப்பில் 6 சிறார்கள் இருந்துள்ளனர் என்றே கூறப்படுகிறது. மேலும், தீ விபத்தில் இருந்து தப்பிக்க, தொடர்புடைய வாடகைதாரர் தங்களது நான்கு பிள்ளைகளை ஜன்னல் வழியாக அக்கம்பக்கத்தினரிடம் வீசியதாகவும் கூறப்படுகிறது.
Picture: New York City Fire Department
இந்த விவகாரத்தில் 66 வயதான ரபீகுல் இஸ்லாம் என்பவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வாடகை கட்டணம் செலுத்தாத அந்த குடும்பம், குடியிருப்பின் இரண்டாவது மாடியில் குடியிருந்து வந்துள்ளது.
முதல் மாடியில் வசித்து வந்த ஷத்ஃபிகுல் இஸ்லாம் என்பவர் தெரிவிக்கையில், அவரும் அவரது அறை தோழர்களும் அதிகாலை 5 மணியளவில் 'தீ' என்ற அலறல் சத்தம் கேட்டு எழுந்து கட்டிடத்திலிருந்து வெளியே ஓடியதாக குறிப்பிட்டுள்ளார்.
அனைவரும் குடியிருப்புக்கு வெளியே சென்ற நிலையில், உள்ளே 6 சிறார்களும் அவர்களின் தாயாரும் சிக்கிக்கொண்டது தெரியவந்துள்ளது. அவர்கள் தங்கள் பிள்ளைகள் நால்வரை ஜன்னல் வழியாக வெளியே வீச, ஷத்ஃபிகுல் இஸ்லாம் மற்றும் அவரது நண்பர்கள் அவர்களை காப்பாற்றியுள்ளனர்.
கொலை முயற்சி வழக்கு
பின்னர் அந்த பெற்றோரும் ஜன்னல் வழியாக வெளியே குதித்துள்ளனர். இதனிடையே தீ விபத்து தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவயிடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், எஞ்சிய இரு சிறார்களை மீட்டுள்ளனர்.
Picture: CBS
இதில் 7 பேர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் 26ல் நடந்த இந்த சம்பவம் தொடர்பில், ஒரு மாத விசாரணைக்கு பின்னர் 66 வயதான ரபீகுல் இஸ்லாம் என்பவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
8 பிரிவுகளில் கொலை முயற்சி வழக்கு, நெருப்பு வைத்தல் மற்றும் தாக்குதல் என அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தற்போதும் அவர் விசாரணைக் கைதியாக சிறையில் உள்ளார் என்றே அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
வாடகை கட்டணம் விவகாரத்தில் ரபீகுல் இஸ்லாம் ஏற்கனவே வாடகைதாரர் குடும்பத்தை எச்சரித்துள்ளார், மட்டுமின்றி, மின்சாரம் மற்றும் எரிவாயுவை துண்டிப்பதாகவும் மிரட்டியுள்ளார் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |