வாடகை வசூலிக்கச் சென்ற பெண் மாயம்: பின்னர் தெரியவந்த அதிர்ச்சி உண்மை
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், வீட்டு வாடகை வசூலிக்கச் சென்ற வீட்டின் உரிமையாளரான பெண் மாயமானார்.
அவரது வீட்டில் வேலை செய்யும் பெண் கொடுத்த தகவலின்பேரில் பொலிசார் தேடுதல் வேட்டையில் இறங்க, அனைவருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது!
வாடகை வசூலிக்கச் சென்ற பெண் மாயம்

உத்தரப்பிரதேசத்திலுள்ள் Ghaziabad என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த தீப்ஷிகா ஷர்மா என்னும் பெண், தனது வீடு ஒன்றை ஒரு தம்பதியருக்கு மாதம் 18,000 ரூபாய்க்கு வாடகைக்கு விட்டிருந்தார்.
பிப்ரவரி மாதம் அந்த வீட்டுக்கு வாடகைக்கு வந்த ஜெய் குப்தா (37), ஆக்ரிதி குப்தா (32) தம்பதியர், கடந்த ஐந்து மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமையன்று, வீட்டு வாடகை வசூலிப்பதற்காக, தனது வீட்டில் வேலை செய்யும் மின்னி என்னும் பெண்ணை அழைத்துக்கொண்டு குப்தா தம்பதியர் வீட்டுக்குச் சென்றுள்ளார் தீப்ஷிகா.

மின்னி, கீழே தீப்ஷிகாவின் நாயுடன் நிற்க, தீப்ஷிகா ஐந்தாவது தளத்திலுள்ள குப்தா தம்பதியர் குடியிருக்கும் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
வெகுநேரமாகியும் தீப்ஷிகா திரும்பி வராததால் குழப்பமடைந்த மின்னி, அலுவலகம் சென்றிருந்த தீப்ஷிகாவின் கணவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அவர் வந்து தேடியும் தீப்ஷிகாவைக் காணாததால் பொலிசார் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
கடைசியாக தீப்ஷிகா, குப்தா தம்பதியர் வீட்டுக்குச் சென்றதாக மின்னி கூறியதைத் தொடர்ந்து அங்கு சென்ற பொலிசார் வீட்டை சோதனையிட, ஒரு கட்டிலுக்கடியில் சூட்கேஸ் ஒன்றிற்குள் தீப்ஷிகாவின் உயிரற்ற உடல் மறைத்துவைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

விசாரணையில், ஆறு மாதங்களுக்கு முன் தனது பிஸினஸ் நஷ்டமடைந்ததால் தன் நிறுவனத்தை மூடிவிட்டதாக தெரிவித்த ஜெய் குப்தா, தீப்ஷிகா தொடர்ந்து பலமுறை வந்து வீட்டு வாடகை கேட்டதாகவும், புதன்கிழமை, அது தொடர்பில் வாக்குவாதம் ஏற்படவே கோபத்தில் தாங்கள் அவரைத் தாக்கிக் கொன்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் தீப்ஷிகாவை குக்கர் ஒன்றால் தலையில் தாக்க, தன் மனைவி துப்பட்டாவால் அவரது கழுத்தை நெறித்ததாக தெரிவித்துள்ளார் ஜெய் குப்தா.
அவரது உடலை ஒரு சூட்கேசில் வைத்து இரவு எங்காவது கொண்டு போட்டுவிடலாம் என எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில், மின்னி கொடுத்த தகவலால் பொலிசார் உடனடியாக வீட்டுக்கு வர, தாங்கள் சிக்கிக்கொண்டதாக தெரிவித்துள்ளார் ஜெய் குப்தா.
ஜெய் குப்தாவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தீப்ஷிகாவின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |