கர்ப்பிணி பெண்களால் நிரம்பும் சுவிஸ் மருத்துவமனைகள்: எச்சரிக்கும் நிபுணர்கள்
சுவிட்சர்லாந்தில் கொரோனா பாதிப்பால் கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது கவலை அளிப்பதாக சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் அதிக எண்ணிக்கையிலான கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் அவசர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும், கொரோனா பெருந்தொற்றின் நான்காவது அலையின் போதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் இளம் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெர்ன் மருத்துவமனைகளில் மட்டுமின்றி சூரிச் மருத்துவமனைகளிலும் இதே நிலை நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 15 முதல் 20 கர்ப்பிணிகள் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் தீவிர கவனிப்பில் இருந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மிக ஆபத்தான கட்டத்திலும் சில கர்ப்பிணிகள் சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது. இது தாயாருக்கும் பிள்ளைக்கும் ஆபத்தாக முடியும் என்ற அச்சத்தையும் மருத்துவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும், பிரசவ நாளுக்கு முன்னரே அறுவை சிகிச்சை முன்னெடுக்கும் சூழலும் உருவாகியுள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆரோக்கியமான கர்ப்பிணிக்கு கொரோனா பாதிப்பு அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது என குறுப்பிட்டுள்ள மருத்துவர்கள், ஆனால் குறை பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இறப்பு விகிதம் உயர காரணமாக அமையலாம் என்கிறார்கள்.