பிரான்சுக்கு வரும் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு: வெளியாகியுள்ள சமீபத்திய தகவல்
பிரான்சுக்கு வரும் தடுப்பூசி பெற்ற பயணிகள், இனி கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று நிரூபிக்கவேண்டியதில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாக சமீபத்திய தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
தற்போதைய விதிகளின்படி பிரான்சுக்கு வரும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை தேவையில்லை என்ற நிலை உள்ளது.
ஆனால், பிரித்தானியா, அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத நாடுகளிலிருந்து வருவோர், தாங்கள் பயணம் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முன்பு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என நிரூபிக்கவேண்டும் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில், நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட பிரான்ஸ் அரசு, அந்தக் கட்டுப்பாட்டை நீக்குவதாக தெரிவித்துள்ளது. நீங்கள் எந்த நாட்டிலிருந்து வந்தாலும் சரி, Omicron பரவலுக்கு முன் இருந்தது போல, நீங்கள் தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தை மட்டும் காட்டினால் போதும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் இன்று, அதாவது சனிக்கிழமை (12.2.2022) அதிகாலை 1.00 மணியிலிருந்து அமுலுக்கு வருகிறது.