வெனிசுலாவை அமெரிக்கா நிர்வகிக்க கடும் எதிர்ப்பு: ஸ்பெயின் உட்பட 6 நாடுகள் எச்சரிக்கை
வெனிசுலாவை அமெரிக்கா நிர்வகிக்க இருப்பதாக வெளியான அறிவிப்புக்கு எதிராக ஐந்து லத்தீன் அமெரிக்க நாடுகளும் ஸ்பெயினும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கூட்டு அறிக்கை
வெனிசுலா தலைநகருக்குள் புகுந்து ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது மனைவியை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,

வாஷிங்டன் நிர்வாகம் அந்த நாட்டைக் கட்டுப்படுத்தும் என்றும், அதன் எண்ணெய் வளத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிலையிலேயே, வெனிசுலாவின் ஜனாதிபதியாக நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் வெளியேற்றியதை நிராகரிப்பதாக பிரேசில், சிலி, கொலம்பியா, மெக்சிகோ, உருகுவே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளன.
மேலும், இயற்கை அல்லது நாட்டின் முதன்மையான வளங்கள் மீது அரசாங்கக் கட்டுப்பாடு அல்லது நிர்வாகம் அல்லது வெளிநபர்களின் கையகப்படுத்துதல் தொடர்பான எந்தவொரு முயற்சி குறித்தும் தங்களின் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளன.

பொதுமக்களின் உயிருக்கு
அத்துடன், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் அமைதிக்கும் பிராந்திய பாதுகாப்புக்கும் மிகவும் ஆபத்தான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளன, மேலும் அவை பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கின்றன என குறிப்பிட்டுள்ளனர்.
இதே கருத்தையே, வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக ட்ரம்பால் அடையாளப்படுத்தப்பட்ட டெல்சி ரோட்ரிக்ஸும் பதிவு செய்துள்ளார். அமெரிக்கா வெனிசுலாவை நிர்வகிப்பதற்கு உதவுவதில் தனக்கு முழுமையான உடன்பாடு இல்லை என்பதை அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவருக்கு உடனடியாகப் பதிலளித்துள்ள ட்ரம்ப், ரோட்ரிக்ஸ் சரியானதைச் செய்யத் தவறினால், அவர் மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும், அது ஒருவேளை மதுரோவை விட மிக மோசமாக இருக்கலாம் என அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |