சீனாவின் பற்றாக்குறையை நிச்சயமாக ஈடுசெய்ய முடியும்: ஜி ஜின்பிங்கை சந்தித்த ரஷ்ய அமைச்சர்
சீனா மற்றும் பிற நாடுகளில் ஏற்பட்டுள்ள வளப் பற்றாக்குறையை ரஷ்யாவால் நிச்சயமாக ஈடுசெய்ய முடியும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முக்கிய எரிசக்தி வழங்குநர்
சமீபத்திய நாட்களில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஸ்பெயின், வியட்நாம் மற்றும் அபுதாபி தலைவர்களை வரவேற்றார்.

எனினும், சீனாவிற்கு ஒரு முக்கிய எரிசக்தி வழங்குநராக இருக்கும் ரஷ்ய பிரதிநிதியையும் வரவேற்று பேசியுள்ளது முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் சீனாவின் பெய்ஜிங்கில் ஜின்பிங்கை சந்தித்தார்.
சந்திப்பின்போது பேசிய ஜி ஜின்பிங், "புவியியல் ரீதியான நெருக்கம் மற்றும் பரஸ்பரப் பூர்த்தி ஆகியவற்றின் நன்மைகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, அனைத்துத் துறை ஒத்துழைப்பையும் ஆழப்படுத்தி, ஒருவருக்கொருவர் வளர்ச்சியின் மீள்திறனை உயர்த்த வேண்டும்" என வலியுறுத்தினார்.

நிச்சயமாக ஈடுசெய்ய முடியும்
பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய லாவ்ரோவ், சீனாவிற்கான எரிசக்தி விநியோகத்தை அதிகரிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக கூறினார்.
மேலும் அவர், "சமமான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் அடிப்படையில் எங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ள சீனா மற்றும் பிற நாடுகளில் ஏற்பட்டுள்ள வளப் பற்றாக்குறையை ரஷ்யாவால் நிச்சயமாக ஈடுசெய்ய முடியும்" என தெரிவித்தார்.
அத்துடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும், ஜி ஜின்பிங்கும் இந்த ஆண்டின் முதல் பாதியில் நேரில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் உறுதிப்படுத்தினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |