தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர்
தற்போது தமிழ்நாடு முதலமைச்சராக உள்ள விஜய்யின் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தமிழன்.
இந்த படத்தில், இந்தியாவின் வெளிநாட்டு கடன் காரணமாக தனிநபர் கடன் ரூ.4,000 உள்ளதால், ரூ.4,000 த்தை விஜய் இந்திய பிரதமருக்கு அனுப்புவதாகவும், அவரை பின்பற்றி பலரும் இந்தியாவின் கடனை அடைக்க பணம் அனுப்புவதாவும், இதனால் இந்தியாவின் கடன் பாதியாக குறைந்தது போன்று காட்சி வைக்கப்பட்டிருக்கும்.
தற்போது அதே போல், தமிழ்நாடு அரசின் கடனை அடைக்க வழக்கறிஞர் ஒருவர் ரூ.1.28 லட்சத்திற்கு காசோலை வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் கடன்
தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சர் மரிய வில்சன் இரு நாட்களுக்கு முன்னர், தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.

இதில், தமிழ்நாட்டின் மொத்த கடன் அளவு ரூ13.18 லட்சம் கோடியாக உள்ளது எனவும், 2020-21 ஆம் ஆண்டில் ரூ.67,087 ஆக இருந்த தனிநபர் மீதான கடன், 2025-26 ஆண்டில் ரூ.1,28,934 ஆக உயர்ந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
அரசு கடனை அடைக்க ரூ.1,28,934 வழங்கிய வழக்கறிஞர்
இதனைத்தொடர்ந்து, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ரியாஸ் அகமது என்பவர் தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் AI அமைச்சர் குமாரை சந்தித்து, தனது பங்களிப்பாக ரூ.1,28,934 தொகைக்கான காசோலையை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக, முதல்வர் விஜய்க்கு கடிதம் ஒன்றையும் வழங்கியுள்ளார். அதில், ''நம் தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கை நேற்று (16.06.2026) வெளியிடப்பட்டதில், தனி நபர் மீதான கடன் ரூ.1,28,934 என்பதை நான் அறிந்தேன்.
இதில் எனது பங்களிப்பாக ரூ.1,28,934 அளிக்கின்றேன். எனவே என் பங்களிப்பை ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
இந்த scene எல்லாம் பாக்குமோது அன்னிக்கு இதெல்லாம் cinema-ல மட்டும் தான் நடக்கும்-னு நெனச்சு சிரிச்சிட்டு போயிருப்போம்.
— Raghu Rajaram (@RaghuTweetbook) June 17, 2026
இன்னிக்கு முதல்வன் climax-ல வர்ற மாதிரி correct அ 9:30am-க்கு office வர Government officers , தமிழன் படத்துல வர மாதிரி கடன திருப்பி கொடுக்கறது-னு இதெல்லாம் real… https://t.co/nsqPKy52lj pic.twitter.com/kLVAIfMLzJ
அரசு யாரிடமிருந்து கடன் பெறுகிறது?
அமெரிக்கா உள்ளிட்ட உலகின் அனைத்து நாடுகளுக்கும் பல லட்சம் கோடிகள் கடன் உள்ளது. கடன் இல்லாமல் அரசை நடத்த முடியாது. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும் போது, அரசு லாபநோக்கில் செயல்படாமல், சேவை நோக்கில் செயல்பட கடன் வாங்க வேண்டிய சூழல் இருக்கும்.
தமிழ்நாடு அரசு, உள்நாட்டு கடன், நேரடியாக தனது குடிமக்களிடம் இருந்தும், தனது ஊழியர்களிடமிருந்தும் கடனாகப் பெறும் Public Account Liabilities, மத்திய அரசிடம் பெறப்படும் நேரடிக் கடன் என 3 வழிகளில் கடன்களை திரட்டுகிறது.
இதில், சுமார் 80% வரை உள்நாட்டு கடன்கள் ஆகும். தமிழ்நாடு அரசு, இந்திய ரிசர்வ் வங்கி மூலம் 'மாநில மேம்பாட்டுக் கடன்கள்' எனப்படும் கடன் பத்திரங்களை சந்தையில் வெளியிடுகின்றன.
இந்த கடன் பத்திரங்களை பொதுத்துறை வங்கிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை வாங்குகின்றன. வங்கிகளிலும், ஆயுள் காப்பீடு திட்டங்களிலும் சேமிக்க, முதலீடு செய்வதற்கு போட்ட பணத்தை, வங்கி உள்ளிட்ட நிதிநிறுவனங்கள் அரசு பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. நபார்டு வங்கி போன்றவற்றில் இருந்தும் சிறு அளவிலான தொகை கடனாக பெறப்படுகிறது.
Public Account Liabilities என்பது, பொதுமக்களின் அஞ்சலக சேமிப்புகள், அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி ஆகியவை அடங்கும். இதில், அரசு வட்டியுடன் அசலை திருப்பி வழங்கும்.
3வதாக மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டங்கள் மற்றும் சில சிறப்பு திட்டங்களுக்காக மத்திய அரசு கடன் பெறும்.
இவ்வாறாக மக்களின் வங்கி சேமிப்பும், அஞ்சலகச் சேமிப்புகளும், அரசு ஊழியர்களின் ஓய்வூதியப் பணத்தையும் வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், அரசின் கடன் பாத்திரங்களில் முதலீடு செய்து கடன் வழங்குகின்றன. அரசு தனது வரி வருவாயில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வட்டியாக அந்த நிதி நிறுவனங்களுக்கு திருப்பி வழங்குகிறது.
இந்திய அரசும், இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களும் இவ்வாறே கடன் பெறுகின்றன. இந்திய அரசு 'G-Secs' என்ற பெயரிலும், மாநில அரசுகள் 'SDLs' என்ற பெயரிலும் ரிசர்வ் வங்கி மூலமாக மக்களின் சேமிப்பையே கடனாகப் பெற்று நிதித் தேவைகளை பூர்த்தி செய்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |