அதிமுகவில் பிளவு ஏற்பட நான் காரணமா? லீமா ரோஸ் விளக்கம்
அதிமுகவில் பிளவுக்கு லீமா ரோஸ் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது குறித்து அவரே விளக்கமளித்துள்ளார்.
அதிமுகவில் பிளவு
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற அதிமுக எதிர்க்கட்சியாக கூட அமர முடியாமல் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவி.சண்முகம், எஸ்.பி வேலுமணி தலைமையில் ஒரு குழு அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவாக இந்த எம்எல்ஏக்கள் வாக்களித்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளதோடு, அவர்களின் கட்சிப்பதவியையும் பறித்துள்ளார்.
மேலும், அவர்கள் தவெக அமைச்சரவையில் அமைச்சர் பதவியை எதிர்பார்த்தே ஆதரவளித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவ்வாறாக அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த பிளவின் பின்னணியில் லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் உள்ளதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
IJKவில் இருந்து விலகிய லீமா ரோஸ், எஸ்.பி.வேலுமணி ஆதரவுடன் அதிமுகவில் இணைந்தார், கட்சியில் சேர்ந்த சில நாட்களிலே தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு கிடைத்தது.
ரூ.1000 கோடியை வாங்கி கட்சிக்கு அந்த பெண்மணியை தலைவியாக்க வேலுமணி திட்டம் போட்டார் என அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
லீமா ரோஸ் விளக்கம்
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில், நீங்கள் கட்சிக்குள் வந்த பிறகு தான் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக ஆதிராஜாராம் குற்றஞ்சாட்டியுள்ளார் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.

கட்சியை ஒன்று சேர்ப்பதற்கு தான் ஏற்பாடு நடந்து கொண்டு இருக்கிறது. கூடிய சீக்கிரம் ஒன்று சேர்ந்து விடுவோம்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |