நாங்கள் டெபாசிட் இழந்ததாகவே இருக்கட்டும்.., நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காட்டம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாங்கள் டெபாசிட் இழந்ததாகவே இருக்கட்டும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கினர். இவர்களுடன் சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தமாக 29 பேர் போட்டியிட்டனர்.
இந்நிலையில், இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா 10,602 வாக்குகள் பெற்றார். மேலும், நோட்டாவுக்கு 853 வாக்குகள் கிடைத்துள்ளது.
டெபாசிட் இழப்பு
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா, "நாங்கள் டெபாசிட் இழந்ததாகவே இருக்கட்டும். வெற்றி பெற்ற திமுக வேட்பாளருக்கு இந்த வெற்றி திருப்தி அளிக்கிறதா என்று கேளுங்கள்.
கடந்த தேர்தலை விட நாங்கள் 2000 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். காணை பகுதியில் திமுக இளைய வாக்காளர்களுக்கு கஞ்சா பட்டுவாடா செய்தனர். இது தேர்தலே அல்ல, திமுகவினர் ஏலம் எடுத்துள்ளனர்.
வருங்காலங்களில் இடைத்தேர்தலை ஏலம் எடுத்துவிடுங்கள். இந்த காரணத்தால் தான் அதிமுக பின்வாங்கியது. இது பணநாயகத்தின் வெற்றி, ஜனநாயகத்தின் மரணம்” என்று பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |