லிஸ்பன் டிராம் விபத்து... மரணமடைந்த பிரித்தானியர்களின் புகைப்படம் வெளியானது
லிஸ்பனில் டிராம் விபத்தில் சிக்கி மரணமடைந்த இரு பிரித்தானியர்களின் புகைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கியதன் காரணம்
போர்த்துகல் தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட தகவலில், 36 வயது Kayleigh Smith மற்றும் 44 வயது Will Nelson மரணமடைந்த பிரித்தானியர்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களுடன், போர்த்துகல் நாட்டவர்கள் ஐவர், தென் கொரியா மற்றும் கனடா நாட்டவர்கள் தலா இருவர் மற்றும் சுவிட்சர்லாந்து, உக்ரைன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த தலா ஒருவர் என புதன்கிழமை நடந்த விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளனர்.
150 ஆண்டு காலமாக செயல்பாட்டில் இருக்கும் இந்த டிராம் சேவை விபத்தில் சிக்கியதன் காரணம் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மான்செஸ்டரின் ஆர்டன் தியேட்டர் பள்ளியில் விரிவுரையாளராக இருக்கும் Will Nelson, விபத்திற்கு முந்தைய நாள்தான் லிஸ்பனுக்கு வந்திருந்தார்.
மேலும், விபத்தில் சிக்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, கெய்லீ ஒரு வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தின் முற்றத்தின் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தேவாலயங்கள் அரண்மனைகள் மற்றும் டிராம்கள் என குறிப்பிட்டிருந்தார்.
அடையாளம் காணப்படவில்லை
இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 22 பேர்களில் எவரும் பிரித்தானியர்கள் அல்ல என போர்த்துகல் பொலிசார் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வில் மற்றும் கெய்லீ உடன் 82 வயது பிரித்தானியர் ஒருவரும் டிராம் விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார். ஆனால், அவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதால், அவரது பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |