கரூர் தவெக கூட்ட நெரிசல் - இதுவரை தமிழகத்தை உலுக்கிய கூட்ட நெரிசல் உயிரிழப்புகள்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின், கரூர் தேர்தல் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்திருந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய, மாநில அரசு மற்றும் தமிழக வெற்றி கழகம் சார்பில் நிவாரணம் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படும் துயரமான நிகழ்வு தொடர்ந்த வண்ணம் உள்ளது.
2024 மெரினா விமான சாகசம்
சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 6 அக்டோபர் 2024 அன்று இந்திய விமானப் படையின் 92 ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை காண, மதிய வெயிலில் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டனர். இதில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 5 பேர் உயிரிழந்தனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
2019 அத்திவரதர் நிகழ்வு
2019 ஜூலை மாதம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீருக்குள் இருந்து அத்திவரதர் வெளியே வரும் நிகழ்வு நடைபெற்றது. 48 நாட்கள் அத்திவரதருக்கு வெளியே வைத்து பூஜை செய்யப்பட்டது.
இதனை காண தினமும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்தனர். அப்போது ஜூலை 18 ஆம் திகதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 4 பேர் உயிரிழந்தனர்.
2019 படிக்காசு நிகழ்வு
2019 ஏப்ரல் மாதம் திருச்சி முத்தய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோவிலில், சித்ரா பௌர்ணமி அன்று படிக்காசு வழங்கும் நிகழ்வு நடைபெறும். அந்த படிக்காசை பெற மக்களிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்தனர்.
2005 வியாசர்பாடி வெள்ள நிவாரணம்
2005 சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வு, வியாசர்பாடி புறநகரில் உள்ள பள்ளி ஒன்றில் 6 நவம்பர் 2005 அன்று நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்தனர்.
2005 எம்ஜிஆர் நகர் வெள்ள நிவாரணம்
வெள்ள நிவாரணம் பெறுவதற்காக 18 டிசம்பர் 2005 அன்று எம்ஜிஆர் நகர் ரேஷன் கடை முன்பு இரவு முதலே கொட்டும் மழையில் 5000க்கும் அதிகமானோர் குவிந்திருந்தனர்.
அதிகாலை 4 மணியளவில் மையத்தின் இரும்பு கேட்திறக்கப்படுவதாக செய்தி பரவியதையடுத்து அனைவரும் முண்டியடித்து உள்ளே சென்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் 42 பேர் உயிரிழந்தனர்.
1992 மகாமகம்
18 பிப்ரவரி 1992 அன்று கும்பகோணம் மகாமஹம் நிகழ்வில் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா நீராடினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 50 பேர் உயிரிழந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |