தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு
லிதுவேனியாவின் தலைநகரான வில்னியஸ் நிர்வாகமானது போர் ஏற்பட்டால் வெளியேற்றும் திட்டத்தை முன்வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளியேற்ற வழிகள்
உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யா அடுத்ததாக லிதுவேனியாவை குறிவைக்கக்கூடும் என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான லிதுவேனியா, 2022 ஆம் ஆண்டு விளாடிமிர் புடினின் படையெடுப்பிலிருந்து உக்ரைனின் தீவிர நட்பு நாடாக இருந்து வருகிறது.
அதன் பின்னர் தங்களின் பாதுகாப்பு செலவினங்களையும் பயிற்சியையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட வெளியேற்றும் திட்டத்தில், எதிரி வரலாற்று ரீதியாக கிழக்கிலிருந்து வந்திருப்பதால், மூன்று முக்கிய வெளியேற்ற வழிகள் மேற்கு நோக்கிச் செல்வதாக வில்னியஸ் நகர மேயர் Valdas Benkunskas ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
மக்களிடையே பீதியை ஏற்படுத்த விரும்பவில்லை என குறிப்பிட்ட அவர், ஒரு திட்டத்தை உருவாக்குவது, நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு, எதற்கு யார் பொறுப்பு என்பதை அறிந்து கொள்வது, நமது பாதுகாப்புப் படைகளை நம்புவது என தெரிவித்துள்ளதுடன்,
ஆனால் இந்தத் திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இலையுதிர்காலத்தில் வெளியேற்றும் பயிற்சிகளை முன்னெடுக்க நகரம் இலக்கு வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அச்சுறுத்தல்களுக்கும் பொருந்தும்
வில்னியஸ் நகரமானது பெலாரஸ் எல்லையிலிருந்து வெறும் 20 மைல் தொலைவில் அமைந்துள்ளது. மட்டுமின்றி, பெலாரஸ் நாட்டில் இருந்தே உக்ரைன் ஊடுருவலுக்கான நகர்வுகளை ரஷ்யா முன்னெடுத்தது. அதே திட்டத்தை தங்கள் மீதும் பயன்படுத்தக் கூடும் என லிதுவேனியா அதிகாரிகள் அச்சப்படுகின்றனர்.
600,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களைக் கொண்ட வில்னியஸ் நகரத்திலிருந்து 48 மணி நேரத்திற்குள் அனைவரையும் முழுமையாக வெளியேற்றப்பட முடியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், இந்த வெளியேற்றத் திட்டமானது, பெலாரஸில் உள்ள ஆஸ்ட்ரோவெட்ஸ் அணுமின் நிலையத்தில் ஏற்படும் சம்பவங்களால் அல்லது இயற்கை பேரழிவுகள் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கும் பொருந்தும் என குறிப்பிட்டுள்ளனர்.
ஆஸ்ட்ரோவெட்ஸ் அணுமின் நிலையம் பாதுகாப்பற்றது என்று லிதுவேனியா வாதிட்டு வரும் நிலையில், பெலாரஸ் மற்றும் ரஷ்யா நிர்வாகங்கள் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |