லிவர்பூல் நட்சத்திரம் முகமது சலா வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை
எகிப்தின் கெய்ரோவில் முகமது சலாவுக்கு சொந்தமான குடியிருப்பில் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொள்ளை போன பொருட்கள்
குறித்த குடியிருப்பின் அருகாமையில் சென்ற உறவினர் ஒருவரே, சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், அந்த உறவினருடன் சலாவின் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
@getty
இதில் கொள்ளை போன பொருட்கள் தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றாலும், உள்ளூர் பத்திரிகைகள் வெளியிட்டுள்ள தகவலில் மின் பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த கருவிகள் என கொள்ளையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
30 வயதான சலா எகிப்திய மக்களால் கொண்டாடப்படும் முக்கிய விளையாட்டு நட்சத்திரம். எகிப்திய மன்னர் என்றும் Pharaoh எனவும் அவரை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
அவரது கெய்ரோ நகர குடியிருப்பில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் கண்காணிப்பு கமெரா பதிவுகளை பொலிசார் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. வாரத்திற்கு 350,000 பவுண்டுகள் ஊதியமாக சம்பாதிக்கும் முகமது சலா தமது சொந்த நகரில் பெருந்தொகை முதலீடு செய்துள்ளார்.
திருடனுக்கு மறுவாழ்வு
தொண்டு நிறுவனங்களுக்கும் அளவுக்கு அதிகமாகவே வாரி வழங்கியுள்ளார். மருத்துவமனை ஒன்றை கட்டி முடித்துள்ளார். மட்டுமின்றி 2022ல் தீக்கிரையான தேவாலயத்திற்கு கட்டுமான பணிகளுக்காக நிதியுதவி அளித்துள்ளார்.
மேலும், தமது தந்தையிடம் இருந்து ஒருமுறை திருட முயன்ற திருடனுக்கு மறுவாழ்வு அளித்ததாகவும் கூறப்படுகிறது.
2017 முதல் லிவர்பூல் அணியில் இணைந்துள்ள சலா, பிரீமியர் லீக் ஆட்டங்களில் 129 கோல்களை பதிவு செய்து முதலிடத்தில் உள்ளார்.
மேலும் 33 ஆட்டங்களில் 22 கோல்களும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.