உயிருடன் தீயில் கருகிய 10 பேர்... வீதியில் இறங்கிய மக்கள்: இராணுவத்தை களமிறக்கிய சீனா
கொரோனா ஊரடங்கில் அடைக்கப்பட்டிருந்த மக்களில் 10 பேர் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்துள்ள சம்பவத்தை அடுத்து சீன மக்கள் வீதியில் இறங்கி போராடத் துவங்கியுள்ளனர்.
10 பேர் உடல் கருகி பலி
குறித்த மக்கள் போராட்டங்களை ஒடுக்க, சீன நிர்வாகம் தற்போது கலவரங்களை அடக்கும் பொலிசாரையும் இராணுவத்தையும் களமிறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
@reuters
ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் கடுமையான பூஜ்ஜிய-கோவிட் ஊரடங்கு காரணமாகவே இந்த துயர சம்பவம் நடந்துள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனையடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் சீனாவின் முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
10 பேர் உடல் கருகி பலியான சம்பவம் தலைநகர் பெய்ஜிங் முதல் ஷாங்காய் வரை எதிரொலித்துள்ளது. வியாழன் அன்று உரும்கியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட கொடிய தீ விபத்தானது கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளின் போது ஏற்பட்டுள்ளதால், ஏற்கனவே நெருக்கடியை எதிர்கொண்டுவரும் மக்களில் கொந்தளிப்பை தூண்டியது.
@AFP
அடக்குமுறைக்கு எதிராக
சீனாவின் கடுமையான இந்த கொரோனா கட்டுப்பாடுகளே, 10 பேர் உடல் கருகி இறக்க காரணமாக அமைந்தது எனவும் மக்கள் கருதுகின்றனர். ஊரடங்கு அமுலில் இருக்கும் பகுதிகளில் மக்கள் வெளியே செல்ல அனுமதிப்பதில்லை என்பதுடன், குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
@reuters
இதனிடையே, சீனாவில் ஆயிரக்கணக்கான இணையவாசிகள், கடுமையான இந்த அடக்குமுறைக்கு எதிராக முதன்முறையாக கேள்வி எழுப்பியுள்ளனர். நகர நிர்வாகம் விரிவான விசாரணை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் உரும்கி நகர நிர்வாகம் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளதுடன், ஊரடங்கு நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக விலக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளனர்.
இருப்பினும் வீதியில் திரண்ட மக்கள், ஜனாதிபதி ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டுள்ளனர்.