லண்டன் ரயில் நிலையத்தில் பரபரப்பு: டஜன் கணக்கான பயணிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு
லண்டன் ஃபாரிங்டன் ரயில் நிலையத்தில் எழுந்த ரசாயன கசிவு அச்சம் காரணமாக பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
ஃபாரிங்டன் ரசாயன கசிவு
வியாழக்கிழமை காலை 9.42 மணிக்கு லண்டனின் ஃபாரிங்டன்(Farringdon) ரயில் நிலையத்தில் எரிவாயு ரசாயன கசிவு தொடர்பான சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் ரயில் நிலையத்தில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
ரசாயன கசிவு தொடர்பான அச்சம் உருவானதை தொடர்ந்து, பிரித்தானிய போக்குவரத்து காவல்துறை மற்றும் லண்டன் தீயணைப்பு படையினர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இதற்கிடையில் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது பதற்றத்தை மேலும் அதிகரித்தது.

இருப்பினும் தீயணைப்பு படையினர் ரயில் நிலையம் முழுவதும் நடத்திய தீவிர சோதனையின் இறுதியில் காற்றில் எந்தவொரு நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்களோ அல்லது ரசாயனப் பொருட்களோ கலக்கவில்லை என உறுதி செய்தனர்.
மருத்துவமனையில் அனுமதி
ரயில் நிலையத்தில் எதிர்பாராத விதமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பயணிகள் 14 பேருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 2 பேர் கூடுதல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரசாயன கசிவு சந்தேகம் தொடர்பாக ரயில் நிலையம் மூடப்பட்டதால் லண்டன் போக்குவரத்து வலையமைப்பில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிட்ட வழித்தடத்தில் பயணிக்கும் லண்டன் ரயில் பயணிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |