லண்டன், ஜேர்மனிக்கு ஆபாச படங்களை அனுப்பி பல கோடி பணத்துடன் சொகுசு வாழ்க்கை! அம்பலமான பின்னணி
இளம்பெண்கள், சிறுமிகளின் ஆபாச படங்களை பதவிறக்கம் செய்து லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் வெப்சைட்டுகளுக்கு விற்று பல கோடி ரூபாய் சம்பாதித்து வந்த நபர் தொடர்பில் புதிய பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
லண்டனில் பணி
தமிழகத்தின் மணப்பாறையை சேர்ந்தவர் ராஜா. இவர் 10 ஆண்டுகளுக்கு முன் லண்டன் சென்று அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளர் பிரிவில் பணியாற்றினார். தொடர்ந்து, சொந்த ஊர் திரும்பிய அவர், திருப்பூரில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து லண்டன், ஜேர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள வெப்சைட்டுகளுக்கு விற்று பல கோடி ரூபாய் சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது.
சிபிஐ நடத்திய சோதனை
இந்த தகவல்கள் சிபிஐக்கு தெரியவந்தது. ராஜா வீட்டில் சோதனை சிபிஐ அதிகாரிகள் (அயல்நாடு செயல்பிரிவு அதிகாரிகள்) டிச.1ம் திகதி வந்தனர். 14 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது ராஜாவின் லேப்டாப், செல்போன், கணினி, ஹார்டிஸ்க், பென்டிரைவ் ஆகியவற்றை எடுத்து சென்றனர்.
அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் ஜவுளி வியாபாரி ராஜா வங்கி கணக்கு வைத்துள்ளார். ராஜாவின் வங்கி கணக்கை ஆய்வு செய்வதற்காக சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை திடீரென அந்த வங்கிக்கு சென்றனர். சுமார், ஒரு மணி நேரத்திற்கு மேலாக வங்கியில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், பல்வேறு நாடுகளில் இருந்து ராஜா பணம் பெற்றது தொடர்பான, ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
கோடிக்கணக்கில் பணம்
சோதனை குறித்து சி.பி.ஐ அதிகாரிகள் கூறுகையில், சிறார்களின் ஆபாச படங்கள், வீடியோக்களை மொபைல் செயலி மூலம் வெளிநாடுகளில் உள்ள வெப்சைட்டுகளுக்கு பதிவேற்றம் செய்து ராஜா பணம் சம்பாதித்து சொகுசாக வாழ்ந்தது தெரியவந்துள்ளது. இந்த வீடியோக்கள் பதிவேற்றத்தில் ராஜாவுக்கு உடந்தையாக இருந்தது யார், வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா, இதற்கு ஏஜென்டாக இருந்தது யார் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.
மேலும் நேற்று ராஜாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, படங்கள், வீடியோக்களை ராஜா ஜெர்மனுக்கு அனுப்பிய தகவல்கள், அந்நாட்டில் உள்ள இன்டர்போல் அமைப்பு மூலம் பெறப்பட்டன. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் ராஜா மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்ததாக தெரிவித்துள்ளனர்.