இந்தியாவுக்கு 2-வது பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா!
டோக்கியோ 2020 ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதி போட்டியில் வெற்றி பெற்று, இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன் (Lovlina Borgohain) பதக்கத்தை உறுதி செய்தார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 7 நாட்களாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை காலிறுதி போட்டியில், 64-69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன், சீன தைபேயின் சின்-சென் நியென்னை (Nien-Chin Chen) எதிர்கொண்டார்.
இப்போட்டியில், முன்னாள் உலக சாம்பியனான சின்-சென் நியென்னை 4-1 என்ற கணக்கில் லவ்லினா தோற்கடித்து அரையிறுதிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில் இந்தியாவுக்கு குறைந்தது ஒரு வெண்கல பதக்கத்தை லவ்லினா தற்போது உறுதி செய்துள்ளார்.
முன்னதாக, பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானு வென்ற வெள்ளிப்பதக்கம் தான் இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.