லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் வீரருக்கு லஞ்சம் - முன்னாள் இந்திய வீரர் கைது
கிரிக்கெட் வீரருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த T20 அணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லங்கா பிரீமியர் லீக்
2026 லங்கா பிரீமியர் லீக்(LPL) இலங்கையில் இன்று தொடங்கி வரும் ஆகஸ்டு 8 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இதில், 5 அணிகள் பங்குபெற்று விளையாட உள்ளது. முதல் போட்டியில், 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜாப்னா கிங்ஸ் அணியும், காலி டைட்டன்ஸ் அணியும் மோத உள்ளது.
மன்ஜோத் கல்ரா கைது
இந்நிலையில் வீரருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக முன்னாள் இந்திய வீரரும், ஜாப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாருமான 27 வயதான மன்ஜோத் கல்ராவை(Manjot Kalra), இலங்கையின் விளையாட்டுத் ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

10 நாட்களுக்கு முன்பு, கல்ரா ஒரு வீரரை அணுகி அவருக்கு 95 லட்சம் இலங்கை ரூபாய் லஞ்சம் வழங்க முயற்சித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், ஜாப்னா கிங்ஸ் அணிக்காக விளையாடும் இலங்கை வீரர்களான பானுக ராஜபக்ச, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் துனித் வெல்லலகே ஆகியோர் புகார் அளித்ததாக காவல்துறை தெரிவித்தது.
முன்னதாக தம்புள்ள தண்டர்ஸ் அணியின் உரிமையாளரான தமீம் ரஹ்மான், பந்தயங்களை ஏற்பாடு செய்ததையும், ஒரு வீரரை செல்வாக்கு செலுத்த முயன்றதையும் ஒப்புக்கொண்ட பின்னர் அவருக்கு நீதிமன்றம் 4 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையையும் 24 மில்லியன் இலங்கை ரூபாய்கள் அபராதமும் விதித்தது.
அணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டாலும், LPL தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியில் விளையாடிய மன்ஜோத் கல்ரா, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்து பிரபலமானார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |