எப்போதும் ரஷ்யாவையும் ரஷ்யர்களையும் மதிக்க வேண்டும்! பிரான்ஸ் அதிபர் அழைப்பு
எப்போதும் ரஷ்யாவையும் அந்நாட்டு மக்களையும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ள ரஷ்ய அரசு அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதலைத் தொடர்ந்து, ரஷ்யாவின் உத்தியோகபூர்வ நிறுவனங்களுக்கு பிரெஞ்சு அதிகாரிகள் சரியான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Maria Zakharova கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் Poissy-யில் நடந்த தேர்தலுக்கு முந்தைய கூட்டத்தில் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், உக்ரைனின் நிலைமைக்கு மத்தியில், ரஷ்யாவையும் அந்நாட்டு மக்களையும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
கலைஞர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு, வணிகம் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் உதவியுடன் ரஷ்ய மற்றும் பெலாரசிய மக்களுடன் தொடர்ந்து பேச வேண்டும்.
சாத்தியமான அனைத்து மனித உறவுகளையும் பராமரிப்பதற்கு நாம் தான் பொறுப்பு.
எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தலைவர்களுடன் தொடர்ந்து பேசுவதே எனது பணி.
ஏனெனில் ரஷ்யாவின் பங்களிப்பு இல்லாமல் நீண்ட கால அமைதி சாத்தியமற்றது என மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.