ஒவ்வொரு புலம்பெயர்ந்தோரின் மரணத்துக்கும் நீங்கள்தான் காரணம்: கடும் சொற்களால் விமர்சித்துள்ள மேக்ரான்
ஆங்கிலக்கால்வாயில் நிகழ்ந்த ஒவ்வொரு புலம்பெயர்ந்தோரின் மரணத்துக்கும் பிரித்தானிய ‘கபட வேடதாரிகள்’தான் காரணம் என கடும் சொற்களால் பிரித்தானியாவை விமர்சித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது புலம்பெயர்தல் கொள்கைகளால் உயிர்களுக்கு ஆபத்தை உருவாக்கிவருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
கடலில் உயிரிழந்தவர்களின் உயிர்களுக்கு பிரான்ஸ் பொறுப்பல்ல, பிரித்தானியாதான் பொறுப்பு என்றார் மேக்ரான்.
பிரித்தானியாவின் தற்போதைய விதிகள், சட்டவிரோத புலம்பெயர்தலை தூண்டுவதாகவும், புகலிடம் கோருவோரை சட்டப்படி நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்றும் கூறிய அவர், அதனால்தான் புலம்பெயர்வோர் உயிரைப் பணயம் வைத்து ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் இறங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரித்தானியா, சட்டப்படி புகலிடக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு வழியை உருவாக்கவேண்டும் என்றும் அவர், அது தொடர்பாக பிரான்ஸ் அழுத்தம் கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.