பிரித்தானியாவுடன் மல்லுக்கட்டும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு மேலும் ஒரு மூக்கறுப்பு: கைவிரித்த சக நாடுகள்
தங்கள் மீன்பிடி படகுகளுக்கு பிரித்தானிய கடல் பரப்பில் மீன் பிடிக்க உரிமம் வழங்காத பிரித்தானியாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் ஒன்று திரளவேண்டும் என அழைப்பு விடுத்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு, மீண்டும் ஒரு மூக்கறுப்பே பதிலாக கிடைத்துள்ளது.
ஆம், ஜேர்மனி, ஸ்பெயின் மற்றும் இத்தாலி முதலான நாடுகள் பிரித்தானியாவுக்கு எதிராக பிரான்ஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரான்ஸ், கடந்த வார இறுதியில் பிரித்தானியா பிரெக்சிட் ஒப்பந்தத்தின் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று கூறி, அது திருப்தியற்ற நடத்தை என தெரிவிக்கும் ஒரு அறிக்கையை சக நாடுகளுக்கு அனுப்பியுள்ளது.
ஆனால், பிரான்சின் வலையில் விழ விரும்பாத மற்ற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், அதன் கோரிக்கையை நிராகரித்ததோடு, இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரான்சுக்கு பரிந்துரைத்துள்ளன.
பிரச்சினை என்னவென்றால், பிரித்தானியாவுக்கு சொந்தமான சேனல் தீவுகளில் ஒன்றான ஜெர்ஸி தீவுப்பகுதியில் மீன் பிடிக்க பிரான்சுக்கு சொந்தமான 47 மீன்பிடி படகுகள் அனுமதி கோரியிருந்தன. ஆனால், அந்த 47 படகுகளில் 12 படகுகளுக்கு மட்டுமே பிரித்தானியா உரிமம் வழங்கியது. இதனால் பிரான்ஸ் மீனவர்கள் கோபமடைந்தனர்.
ஜெர்ஸி தீவுக்கு பிரான்சிலிருந்துதான் மின்சாரம் செல்லுகிறது. ஆகவே, தங்கள் 47 படகுகளுக்கும் பிரித்தானியா உரிமம் வழங்கவில்லையென்றால், மின்சாரத்தை துண்டித்துவிடுவோம் என பிரான்ஸ் மிரட்டல் விடுத்தது.
அத்துடன், பிரித்தானியாவுக்கு எரிபொருள், மின்சாரம் முதலான விடயங்கள் வழங்கப்படுவதை தடுக்குமாறும், பழிவாங்கும் நடவடிக்கையாக வரிகள் விதிக்குமாறும் ஐரோப்பிய ஒன்றியத்தை பிரான்ஸ் வலியுறுத்தியது.
ஆனால், எதிர்பாராத திருப்பமாக, ஐரோப்பிய ஆணையம், சும்மா பிரித்தானியாவை மிரட்டவேண்டாம், உருப்படியாக ஏதாவது தீர்வு காண முயற்சி செய்யுங்கள் என பிரான்சுக்கு குட்டுவைத்தது.
அத்துடன், பிரான்ஸ் ஜனாதிபதி தன் நாட்டின் லாபத்துக்காக ஐரோப்பிய ஒன்றியத்தை ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் அது பிரான்சை குற்றம் சாட்டியது.
ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்திடம் குட்டு வாங்கிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், தற்போது சக நாடுகளும் கைவிட்டுவிட்டதால், அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை.