போதும் நிறுத்துங்கள்... பிரான்சில் பொலிசாரால் கொல்லப்பட்ட இளைஞரின் பாட்டி விடுத்துள்ள கோரிக்கை
பிரான்சில் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞரின் பாட்டி, போராட்டக்காரர்கள் பொதுச்சொத்துக்களை நாசம் செய்வதை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
17 வயது இளைஞரை சுட்டுக்கொன்ற பொலிசார்
கடந்த செவ்வாய்க்கிழமை காலை, பிரான்சிலுள்ள Nanterre என்னுமிடத்தில், விதிகளை மீறியதாக ஒரு காரை பொலிசார் நிறுத்தச் சொல்லியதாகவும், அந்தக் காரின் சாரதி காரை நிறுத்தாமல் சென்றதாகவும் கூறி பொலிசார் அந்தக் காரை ஓட்டிய Nahel (17) என்னும் இளைஞரை சுட்டுக்கொன்றுள்ளனர்.
Nahel கொல்லப்பட்டதற்கு பிரான்சில் மட்டுமல்ல ஐ. நா சபை மனித உரிமைகள் அமைப்பிலிருந்தும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
ஆனால், இந்த சம்பவத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஒரு கூட்டம் பொதுச்சொத்துக்களை நாசமாக்கி வருகிறது, பாரீஸ் புறநகர்ப்பகுதியான L'Hay-les-Roses என்ற இடத்தின் மேயரைக் கொல்ல முயற்சி நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கொல்லப்பட்ட இளைஞரின் பாட்டி விடுத்துள்ள கோரிக்கை
இந்நிலையில், பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட Nahelஇன் பாட்டி, போராட்டக்காரர்கள் பொதுச்சொத்துக்களை நாசம் செய்வதை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர்கள் போராட்டம் நடத்துவதற்காக Nahelஇன் மரணத்தை சாக்குப்போக்காக பயன்படுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ள Nahelஇன் பாட்டியான Nadia, போராட்டக்காரர்களை, நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார்.
அவர்கள் கண்ணாடி ஜன்னல்களையும், பேருந்துகளையும், பள்ளிகளையும் சேதப்படுத்துவதை நிறுத்தவேண்டும் என்று கூறியுள்ள அவர், அமைதி ஏற்படவேண்டும் என்றே தாங்கள் விரும்புவதாகவும், யாரும் எதையும் நாசம் செய்வதை தாம் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
தன் இதயம் வேதனைப்படுவதாக தெரிவித்துள்ள Nadia, அதே நேரத்தில், பொலிசாரானாலும் சரி, போராட்டக்கார்களானாலும் சரி தவறு செய்த அனைவரும் தண்டிக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |