மீண்டும் புடினுடன் தொலைபேசியில் பேசியுள்ள மேக்ரான்: இம்முறை எதற்காக தெரியுமா?
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதிலிருந்தே பல முறை போரை நிறுத்துமாறு புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்துவந்தார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
அவரது முயற்சிகளை பலரும் கேலி செய்த பின்னரும், அவர் புடினை வலியுறுத்துவதை நிறுத்தவில்லை.
இந்நிலையில், மீண்டும் புடினை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவருடன் பேசியுள்ளார் மேக்ரான்.
இம்முறை, உக்ரைனின் மரியூபோலில் உள்ள உருக்காலையில் தஞ்சம் புகுந்துள்ள மக்களை வெளியேற்ற மீண்டும் அனுமதிக்குமாறு அவர் புடினைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பதிலுக்கு, மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வாங்குவதை நிறுத்தவேண்டும் என்று புடின் கேட்டுக்கொண்டதுடன், உக்ரைன் தரப்பு போரை முடிக்கும் பேச்சுவார்த்தைகளை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என குற்றமும் சாட்டியதாக மேக்ரான் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் படைகள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வருவதாகவும், அதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ள புடின், மேற்கத்திய நாடுகள் உக்ரைன் தனது அராஜகங்களை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தவேண்டும் என்றும் கூறினாராம்.
எல்லாவற்றிற்கும் மேல், ரஷ்ய தரப்பு பேச்சுவார்த்தைக்கு இன்னமும் தயாராக இருப்பதாகவும் புடின் மேக்ரானிடம் கூறியுள்ளாராம்!