அமெரிக்கா உக்ரைனுக்கு துரோகம் செய்யும்: ஜெலென்ஸ்கியை எச்சரித்த மேக்ரான்
பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து தெளிவு இல்லாமல், அமெரிக்கா உக்ரைன் விவகாரத்தில் துரோகம் செய்யும் வாய்ப்பு இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் ஜெலென்ஸ்கியை எச்சரித்ததாக தகவல் கசிந்துள்ளது.
பெரிய ஆபத்து
ஜேர்மனியின் Der Spiegel பத்திரிகை குறித்த தகவலை வெளியிட்டுள்ளதுடன், ஐரோப்பியாவின் தலைவர்கள் பலரின் சமீபத்திய தொலைபேசி உரையாடல்களை ஆதாரமாக குறிப்பிட்டுள்ளது.

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அணுகுமுறை குறித்து ஐரோப்பா தலைவர்கள் பலர் அடிப்படை சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளதாக Der Spiegel பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
மேலும், பேச்சுவார்த்தைகளின் தற்போதைய பதட்டமான கட்டம், உக்ரைனின் சிக்கலில் உள்ள ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கு ஒரு பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என பிரெஞ்சு ஜனாதிபதி எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
உக்ரைன் ஜனாதிபதி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஜேர்மனியின் சேன்ஸலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் கூறியதாக கூறப்படுகிறது.
அத்துடன், அவர்கள் உக்ரைனுடனும் ஐரோப்பாவுடனும் விளையாடுவதாக ஜெலென்ஸ்கியிடம் மெர்ஸ் கூறியதாகவும் தகவல் கசிந்துள்ளது. ஐரோப்பாவின் மற்ற தலைவர்களும் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியதாக Der Spiegel பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
பாதுகாக்க வேண்டும்
கோல்ஃப் தொடர்பாக ட்ரம்புடன் நெருக்கம் காட்டும் பின்லாந்தின் அலெக்சாண்டர் ஸ்டப், நாம் உக்ரைனையும் ஜெலென்ஸ்கியையும் அவர்களிடம் தனியாக ஒப்படைத்துவிடக்கூடாது என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது.

பொதுவில் ட்ரம்பை மிகவும் பாராட்டும் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே கூட, ஜெலென்ஸ்கியை நாம் பாதுகாக்க வேண்டும் என்ற அலெக்சாண்டர் ஸ்டப் கருத்துடன் உடன்படுவதாகக் கூறப்படுகிறது.
ஆனால், கசிந்துள்ள இந்த விவகாரத்தில் பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் உக்ரைன் ஜனாதிபதி அலுவலகங்கள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளதாகவே Der Spiegel பத்திரிகை தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |