ஐரோப்பிய நாடுகளின் பதிலடி உறுதி... இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பிரான்சின் மேக்ரான்
பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையை இணைத்துக்கொள்ளும் இஸ்ரேலின் திட்டமானது ஐரோப்பிய நாடுகளின் பதிலடியைத் தூண்டுவதாகும் என பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேக்ரான் எச்சரிக்கை
பிரான்ஸுக்கு விஜயம் செய்துள்ள பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் உடனான சந்திப்பை அடுத்தே இமானுவல் மேக்ரான் இஸ்ரேலை எச்சரித்துள்ளார்.

பாலஸ்தீன நிர்வாகத்தின் தலைவராக நீண்டகாலமாக செயல்பட்டுவரும் அப்பாஸ், இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக்கரையின் சில பகுதிகளை மட்டுமே தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
அத்துடன், அமெரிக்கா முன்னெடுத்துள்ள புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் காஸா மீதான நிர்வாகமும் பாலஸ்தீன அதிகாரிகள் வசம் வரும் என்றும் நம்பப்படுகிறது.
இந்த நிலையிலேயே, பாலஸ்தீனப் பிரதேசத்தில் வன்முறை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மேற்குக் கரையை இஸ்ரேல் இணைப்பதற்கான எந்தவொரு திட்டத்திற்கும் எதிராக மேக்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அப்பாஸ் உடனான கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மேக்ரான், பகுதியாக அல்லது முழுமையான இணைப்பிற்கான திட்டங்கள், சட்டப்பூர்வமாகவோ அல்லது நடைமுறை ரீதியாகவோ முன்னெடுப்பது எல்லைகளை மீறுவதாகும்,

ஐரோப்பிய நேசநாடுகளுடன் இணைந்து வலுவாக பதிலடி தருவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இஸ்ரேலியக் குடியேறிகளின் வன்முறையும், குடியேற்றத் திட்டங்களின் அதிகரிப்பும் புதிய உச்சங்களை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள மேக்ரான்,
இது மேற்குக் கரையின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும், சர்வதேச சட்ட மீறல்களாகவும் அமைகிறது என்றார். காஸா மீது போர் வெடித்த நிலையில் மேற்குக் கரையில் வன்முறையும் அதிகரித்துள்ளது.

தாக்குதலும் வன்முறையும்
காஸாவில் போர் தொடங்கியதிலிருந்து மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் அல்லது குடியேறிகள் குறைந்தது 1,002 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளனர். அதே காலகட்டத்தில், மேற்குக் கரையில் பாலஸ்தீன தாக்குதல்களில் இராணுவ வீரர்கள் உட்பட 43 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
அக்டோபர் 1ம் திகதி முதல் காஸாவில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தாலும், இஸ்ரேலின் தாக்குதலும் வன்முறையும் தொடர்ந்து வருவதாகவே கூறுகின்றனர்.

2023 அக்டோபர் மாதம் நெதன்யாகு அரசாங்கம் தொடங்கிய போரால், பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறார்கள் உட்பட 69,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் காஸா பகுதியில் கொன்றுள்ளது.
முன்னதாக மேக்ரான் தலைமையிலான பிரான்ஸ் நிர்வாகம் கடந்த செப்டம்பர் மாதம் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |