அப்பா, அம்மா இறந்துட்டாங்க! கூலி வேலை... ஒலிம்பிக்கில் பங்கேற்கும் சாதனை தமிழச்சி ரேவதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 26 போ் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் நேற்று அறிவித்த நிலையில் அதில் ரேவதி வீரமணி என்ற சோதனையை சாதனையாக்கிய தமிழ் பெண் பெயரும் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே பல சர்வதேச தடகளப் போட்டிகளில் தனது தடத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் ரேவதி, தற்போது ஒலிம்பிக் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டிருப்பதை அடுத்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரேவதி கடந்து வந்த பாதைகள் கரடு முரடானது. தமிழகத்தின் மதுரையை அடுத்த சக்கிமங்களம் என்று சிறிய கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி. ஏழை குடும்பத்தில் பிறந்த ரேவதியின் தந்தை அவருக்கு நான்கு வயதாக இருக்கும் போது மரணமடைந்தார்.
இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் அடுத்த வருடமே அவரின் தாயும் மரணம் அடைந்த செய்தி அந்தக் குடும்பத்தை நிலைகுலையவைத்தது.
தாய், தந்தை இல்லாத நிலையில் தனது தங்கையுடன் நிர்கதியாக நின்ற ரேவதிக்கு இருந்த ஒரே ஆறுதல் அவரின் பாட்டி மட்டும்தான். பாட்டியின் அரவணைப்பில் இருந்தாலும், கல்விக்காக அரசு விடுதியிலேயே தங்க வேண்டிய நிலை.
தனது சகோதரியுடன், அரசாங்கத்தால் நடத்தப்படும் விடுதிகளில் தங்கி, தினசரி கூலித் தொழிலாளியாகப் பணியாற்றிய தனது பாட்டியின் ஆதரவோடு அரசு நடத்தும் பள்ளிகளில் படித்து வந்தார் ரேவதி பள்ளியில் தான் இவரின் ஓட்டப்பந்தய ஆரம்பக் காலகட்டம்.
ஒருமுறை மண்டலப் போட்டிகளில் கலந்துகொண்டு ஷூ இல்லாமல் ரேவதி ஓடும்போது அவரின் பயிற்சியாளர் கண்ணன் அதை கவனித்து இருக்கிறார். அந்த பயிற்சியாளர் பின்னாளில் ரேவதிக்கு அடைக்கலம் கொடுத்து இந்த நிலைக்குக் கொண்டுவர காரணமாகி இருக்கிறார்.
கண்ணன் தான் ரேவதியின் பாட்டியிடம் சென்று ரேவதியின் எதிர்காலம் குறித்து விரிவாக எடுத்துரைத்து அவரை படிப்பிற்கும், தடகளப் போட்டிக்கும் மீண்டும் திரும்ப உதவியிருக்கிறார்.
அவரின் உதவியால் அடுத்த ஒரு வருடத்திற்குள் தனது முதல் தேசியப் பதக்கத்தை வென்று அசத்தினார் ரேவதி. இந்த வெற்றி அவரை கிராமத்தில் ஒரு மினி பிரபலமாக மாற்றியது.
அவரது சாதனைகள் செய்தித்தாள்களில் வெளியாக மக்கள் அவரை ஊக்குவிக்கத் தொடங்கினர். இப்படி அவருக்குக் கிடைத்த உதவி, மற்றும் ஊக்கம் காரணமாக கடினப் பயிற்சியை மேற்கொண்டு தற்போது ஒலிம்பிக் போட்டி வரை சென்றுள்ளார்.
இந்த தமிழச்சி ஒலிம்பிக்கில் பல்வேறு சாதனைகளை படைக்க நாமும் வாழ்த்துவோம்..!