திருப்பரங்குன்றத்தில் பதற்றம் ; இன்றே தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவு - கைதுக்கு தயாராகும் காவல்துறை
திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்ததோடு, இன்றே தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பரங்குன்ற தீபம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது.

இந்த மலை உச்சியின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் ஆலயமும் மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன.
வழக்கமாக கார்த்திகை தீப திருவிழாவின் போது, அங்குள்ள பிள்ளையார் கோவிலின் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவது வழக்கமாக இருந்தது.
இந்நிலையில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்து அமைப்பினர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும், தவறும் பட்சத்தில் 6;05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என உத்தரவிட்டார்.
இதனையடுத்து, மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோவில் செயல் அலுவலர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

நேற்று வழக்கமாக தீபம் ஏற்றப்படும் பிள்ளையார் கோவிலின் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது.
இதனை கண்டித்து, இந்து அமைப்பினர் பெருமளவில் கோவில் முன்பு திரண்டனர். மேலும், காவல்துறையினர் வைத்திருந்த பேரிகார்டை தூக்கி எறிந்து விட்டு, மலை மீது எற முயற்சித்தனர்.

144 தடை உத்தரவு
இதில் காவல்துறை மற்றும் இந்து அமைப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, மனுதாரர்களில் ஒருவரான ராம ரவிக்குமார், நீதிமன்றம் அனுமதியளித்த இடத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை என கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "தன்னுடன் மனுதாரர் தீபம் ஏற்ற தன்னுடன் 10 பேரை அழைத்துச் செல்லலாம், சிஐஎஸ்எஃப் வீரர்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

சிஐஎஸ்எஃப் வீரர்களின் பாதுகாப்புடன் சென்ற ராம ரவிக்குமார் நீதிமன்ற உத்தரவை காட்டியும் காவல்துறை அவருக்கு அனுமதி வழங்கவில்லை.
இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு இன்று காலையில் மீண்டும் விசாரணைக்கு வருவதால் அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தையடுத்து மனுதாரர் உள்ளிட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனையடுத்து, அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இன்றே தீபம் ஏற்ற உத்தரவு
இதனையடுத்து, இன்று மதியம் விசாரணைக்கு வந்த மேல்முறையீடு மனுவை உள்நோக்கம் கொண்டதாக கருதி இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த தனி நீதிபதி சுவாமிநாதன், "மனுதாரர் இன்று திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும், அதற்கு காவல் ஆணையர் முழு பாதுகாப்பை வழங்க வேண்டும்.
இன்றே தீபம் ஏற்ற உரிய பாதுகாப்பு தராவிட்டால் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்படும். உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை நாளை காலை 10:30 மணிக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.
உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை அடுத்து, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றம் வருகை தந்துள்ளார். முன்னதாக அவர் வந்த போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
இதனையடுத்து, கோவில் முன்பு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்து அமைப்பினர் ஏரளாமானோர் அங்கு கூடியுள்ள நிலையில், 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாகவும், கலைந்து செல்லுங்கள், மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்வும் எனவும் கூடியுள்ளவர்களிடம் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

இந்து அமைப்பினர், காவல்துறையினரிடையே வாக்குவாதம் செய்து வரும் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |