மதுரோவை பலவந்தமாகக் கடத்திய ட்ரம்ப்... ஈரானை பயமுறுத்தும் இஸ்ரேல்
நிக்கோலஸ் மதுரோவை கடத்திச் சென்றதாக அமெரிக்கா அறிவித்த சில மணி நேரங்களில், ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த இஸ்ரேலிய அரசியல்வாதி யாயிர் லாபித்.
வாய்ப்புகளை அதிகரிக்கிறது
வெனிசுலாவில் நடப்பதை ஈரான் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றே யாயிர் லாபித் தமது எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்து, ஈரானுக்கு எதிராகப் புதிய தாக்குதல் தொடர்பில் அச்சுறுத்தல் விடுத்த ஒரு வாரத்திற்குள், மதுரோ அதிகாரத்திலிருந்து பலவந்தமாக அகற்றப்பட்டுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பின்னணி வேறாக இருந்தாலும், மதுரோவுக்கு எதிராக ட்ரம்ப் எடுத்துள்ள இந்த நடவடிக்கை ஈரானுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஈரான் விவகாரத்தில் ட்ரம்ப் நேரிடையாக களமிறங்கலாம் அல்லது நெதன்யாகுவிற்கு அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரலாம் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், ட்ரம்பிடம் எந்தக் காரணத்தாலும் ஈரான் சரணடைய வாய்ப்பில்லை என்ற நிலையில், இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒரு சாத்தியமான மோதலை நோக்கிய பாதையில் முன்னேறுவதாகவே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
மதுரோ ஈரானின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவர். மேற்கத்திய நாடுகளால் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளான இந்த இரண்டு நாடுகளும் தங்களின் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்த முயற்சி செய்து வந்துள்ளன.

இந்த வர்த்தகத்தின் மதிப்பு பல பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது மதுரோ கைதாகியுள்ள நிலையில், ஈரானின் சிறிய நட்பு வட்டாரம் என்பது மேலும் சிறியதாகியுள்ளது.
ஏற்கனவே சிரியாவின் பஷர் அல்-அசாத் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார், மேலும் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பு நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது.
அனைத்து எதிரிகளுக்கும்
இந்த நிலையிலேயே, மதுரோவின் கைது நடவடிக்கையை ஈரான் உடனடியாக கண்டித்துள்ளதுடன், சட்டவிரோத ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது.

ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவின் அனைத்து எதிரிகளுக்கும் ஒரு செய்தியை உணர்த்தும் விதமாகவே மதுரோவின் கடத்தல் சம்பவம் நடந்ததாக ரூபியோ குறிப்பிட்டார். இதற்கு உடனடியாகவே பதிலளித்துள்ள ஈரானிய உயர் தலைவர் அலி கமேனி,
நாம் எதிரியிடம் சரணடைய மாட்டோம், நாம் எதிரியை மண்டியிட வைப்போம் என சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்ப் ஏற்கனவே அலி கமேனி படுகொலை செய்யப்படுவார் என பலமுறை மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் ஜூன் மாதம் நடந்த போரின் போது அலி கமேனியை ஒழித்துக்கட்ட முயன்றதாக இஸ்ரேலிய அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர்.
இருப்பினும், வெனிசுலா போன்ற ஒரு நடவடிக்கையால் ஈரானை எதுவும் செய்துவிட முடியாது என்றும், ஈரான் மீது ஒரு திடீர் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்வது மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |