75 ஆண்டுகளுக்கு முன் மாயமான கனேடிய போர் வீரர்கள்... ஜேர்மன் ஆய்வாளரால் வெளிவந்துள்ள முக்கிய தகவல்
ஜேர்மன் கிராமம் ஒன்றில் பெயர் தெரியாத ஒரு அமெரிக்கரின் கல்லறை ஒன்று உள்ளது. ஜேர்மனியின் Auerstedt கிராமத்தில் உள்ள அந்த கல்லறையில், ’1945ஆம் ஆண்டு உயிரிழந்த பெயர் தெரியாத அமெரிக்க போர் வீரர்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அது ஒரு அமெரிக்கரின் கல்லறை அல்ல என்கிறார் ஜேர்மன் ஆய்வாளரான René Schütz. அது கனேடிய போர் விமானம் ஒன்றிலிருந்து விழுந்த கனேடிய போர் வீரரின் கல்லறை என்கிறார் அவர்.
இரண்டாம் உலகப்போரின்போது காணாமல் போன விமானப்படை வீரர்களைத் தேடும் ஒரு குழுவைச் சேர்ந்தவர் René Schütz. 1945ஆம் ஆண்டு போர் விமானம் ஒன்று Auerstedt கிராமத்துக்கு வெளியே விழுந்து நொறுங்கியதைக் கண்டவர்களில் சிலர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்.
அந்த விமானம் விழும்போது, அதன் விமானி பாராசூட்டில் குதித்திருக்கிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரது பாராசூட் இயங்காததால் கீழே விழுந்து உயிரிழந்திருக்கிறார் அவர்.
கிராம மக்கள் அவரது உடலை எடுத்து ஒரு சவப்பெட்டியில் வைத்து, அந்த விழுந்து நொறுங்கிய விமானத்திலிருந்து கிடைத்த உடல் பாகங்களை சேகரித்து மற்றொரு சவப்பெட்டியில் வைத்து, இரண்டு பெட்டிகளையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்துள்ளார்கள்.
அந்த கல்லறையில்தான் 1945ஆம் ஆண்டு உயிரிழந்த பெயர் தெரியாத அமெரிக்க போர் வீரர் என்று பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த விமானத்தின் பாகங்களையும் ஆராய்ந்த René Schütz, அது அமெரிக்கர்கள் பயன்படுத்தும் விமானம் அல்ல என்பதையும் கண்டறிந்துள்ளார்.
விமான வகை, விழுந்த இடம், திகதி ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, அது ஒரு கனேடிய விமானம் என தெளிவாக தெரிவதாக குறிப்பிட்டுள்ளார் René Schütz. அத்துடன், கல்லறையைத் தோண்டி எடுத்தபோது, அதனுள் போர் வீரர்கள் அடையாளத்துக்காக அணியும் ஒரு சிறு பட்டையின் துண்டு கிடைத்துள்ளது.
அதில் CAN என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, இவை எல்லாமே அந்த கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளவர்கள் கனேடியர்கள் என்பதைக் காட்டுவதாக தெரிவிக்கிறார் René Schütz.
அவரது கண்டுபிடிப்புகள் நிரூபிக்கப்பட்டுவிட்டால், அது கனடாவுக்கும் கனேடியர்களுக்கும் மட்டுமல்ல, காணாமல் போன அந்த போர் வீரர்களின் குடும்பத்தினருக்கும் மிகப்பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும் என்கிறார் அவர்.