அவுஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணு கைது
அரசுப்பள்ளியில் மறுபிறவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்ச்சை பேச்சு
சென்னையில் அசோக் நகரில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் படிக்கும் 12 -ம் வகுப்பு மாணவர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றை நடத்த வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியை முடிவு செய்தார்.
பின்னர், சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு என்பவர் வரவழைக்கப்பட்டு சொற்பொழிவு நடத்தப்பட்டது. அப்போது அவர் மறுபிறவி குறித்து பேசியது தற்போது சர்ச்சையாக மாறியது.
அவர் பேசுகையில், "மற்ற பிறவிகளில் செய்த பாவங்களால்தான் மறுபிறவி கிடைக்கிறது. போன ஜென்மத்தில் பாவங்கள் செய்தவர்கள் தான் மறுபிறவியில் ஏழைகளாகவும், மாற்றுத்திறனாளிகளாகவும் பிறக்கின்றனர்" என்றார். இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக மாறியது.
இந்த சம்பவத்திற்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவன்பில் மகேஷ் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மகாவிஷ்ணு தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
மகாவிஷ்ணு கைது
இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பும் மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்ய வேண்டும் என்று பொலிஸார் திட்டமிட்டனர்.
இதன் பின்னர் சென்னை விமான நிலையத்திற்கு சைதாப்பேட்டை பொலிஸார் வந்தனர். இதையடுத்து, சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை நிலையத்தில் வைத்தே கைது செய்த பொலிஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |