அதிரடி காட்ட தவறிய வீரரை பாதியில் வெளியேற்றிய ஜெயவர்த்தனே: அவர் கூறிய காரணம்
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் திலக் வர்மாவை பாதியில் வெளியேற்றியது ஏன் என, மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த ஐபிஎல் 16வது போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் இம்பேக்ட் வீரராக களமிறங்கப்பட்ட மும்பை வீரர் திலக் வர்மா ஓட்டங்களை எடுக்க தடுமாறினார். அதிலும் 19வது ஓவரில் பவுண்டரி எதுவும் விளாச முடியாமல் சிங்கிள் ரன்னாகவே ஓடி எடுத்தார்.
இது ரசிகர்களை ஆத்திரப்படுத்தியதுடன், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தையும் அதிருப்தியில் ஆழ்த்தியது. இதன் காரணமாக திலக் வர்மா ரிடையர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்த்தனே (Mahela Jayawardene) விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "திலக் வர்மா சூர்யகுமாருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக விளையாடினார். போட்டியை அவரே முடிக்க வேண்டும் என்றே நினைத்தார். அதற்காக இறுதி ஓவர் வரை விளையாட முற்பட்டார்.
ஆனால் அவர் சிரமத்திற்குள்ளாகும்போது, வேறு ஒருவர் புதிதாக விளையாட வேண்டும் என எனக்கு தோன்றியது. கிரிக்கெட்டில் இது எப்போதும் நிகழ்வதுதான். அவரை வெளியேற்றுவது சரியானதல்ல. ஆனால், அதை நாங்கள் செய்ய வேண்டி இருந்தது. அப்போது அதுதான் சரியான முடிவாக தோன்றியது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |