அமெரிக்க நகரை உலுக்கிய சம்பவம்... 22 பேர் பலி, டசின் கணக்கானோர் காயம்: துப்பாக்கிதாரி மாயம்
அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் மர்ம நபரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இதுவரை 22 பேர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று பகுதிகளில்
மைனே மாகாணத்தின் Lewiston நகரிலேயே புதன்கிழமை இரவு குறித்த நடுங்கவைக்கும் சம்பவம் நடந்துள்ளது. பொலிஸ் தரப்பு தெரிவிக்கையில், துப்பாக்கிதாரி இன்னும் சிக்கவில்லை எனவும், சிறப்பு அதிகாரிகள் குழு தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Maine Police Department
உள்ளூர் உணவகம், மதுபான விடுதி உட்பட மூன்று பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தானியங்கி பாணியில் இயங்கும் துப்பாக்கியை ஏந்தியபடி துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் புகைப்படத்தை உள்ளூர் பொலிசார் பேஸ்புக்கில் பதிவு செய்து பொதுமக்களை எச்சரித்துள்ளதுடன், கைது நடவடிக்கைகளுக்கு உதவவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
@ap
மேலும் துப்பாக்கிதாரி இதுவரை சிக்காத நிலையில், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
50 முதல் 60 என கூறப்படுகிறது
இதனிடையே, ஜனாதிபதி ஜோ பைடனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் அதிகாரிகளை அவர் தொடர்புகொள்வார் எனவும் கூறப்படுகிறது. மைனே மாகாண ஆளுநரும் சம்பவயிடத்திற்கு செல்வார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 50 முதல் 60 என கூறப்படுகிறது. ஆனால் துப்பாக்கியால் காயம் பட்டவர்கள் எண்ணிக்கை இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
ஆயுததாரி இதுவரை சிக்காத நிலையில், மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், கதவுகளைப் பூட்டிக் கொள்ளுமாறும் பொலிஸார் எச்சரித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |