திடீரென்று மூடப்பட்ட பிரித்தானியாவின் முதன்மையான விமான நிலையம்: 100 விமானங்கள் ரத்து
பிரித்தானியாவின் முதன்மையான விமான நிலையம் ஒன்றில் தனியார் விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
7.30 மணி வரையில் ரத்து
பிரித்தானியாவின் பர்மிங்காம் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அல்லது தரையிறங்கும் விமானங்கள் அனைத்தும் இன்று மதியத்திற்கு மேல் 7.30 மணி வரையில் ரத்து செய்யபப்ட்டுள்ளது.
பெல்ஃபாஸ்டுக்குப் பயணித்துக் கொண்டிருந்த Beech King நிறுவனத்தின் இலகுரக விமானம் ஒன்று அவசர நிலைமை காரணமாக பர்மிங்காம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
அந்த விமானத்தில் பயணித்த மூவருக்கு சம்பவயிடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. மதியத்திற்கு மேல் 1.45 மணிக்கு தகவல் கிடைத்ததாகவும், இதனையடுத்து மருத்துவ உதவிக் குழு ஒன்று பர்மிங்காம் விமான நிலையத்திற்கு விரைந்தது என்றும் கூறப்படுகிறது.
Beech King விமானம் தரையிறங்கியதும், மூவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் இருந்ததாக மேற்கு மிட்லாண்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. இதே Beech King விமானம் ஒன்று ஜூலை 13ம் திகதி லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நெருப்பு கோளமாக விபத்தில் சிக்கியதில், அந்த விமானத்தில் பயணித்த நால்வர் கொல்லப்பட்டனர்.
இன்று, பர்மிங்காம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்ட விமானமானது 1981ல் கட்டப்பட்டதாகும். 1.16 மணிக்கு புறப்பட்ட அந்த விமானம் 5,750 அடி உயரத்தில் சென்ற நிலையில், திடீரென்று அவசர நிலைக்கு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
100 விமானங்கள் பாதிக்கப்படும்
இதனையடுத்து மதியம் 2 மணிக்கு முன்னதாக அந்த விமானம் பர்மிங்காம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விமான நிலையத்தின் சமூக ஊடக பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில்,
எதிர்பாராத ஒரு விமான சம்பவத்தைத் தொடர்ந்து, ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். விமான நிலையத்தில் ஏற்கனவே உள்ள பயணிகளுக்கு நாங்கள் தகவல் தெரிவிப்போம்,
இன்று பிற்பகல் பயணம் செய்ய வேண்டியவர்கள் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு தங்கள் விமானத்தின் நிலையை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். புதிய தகவல்கள் உடனுக்குடன் பயணிகளுக்கு தெரிவிக்கப்படும் என்றும் பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து கிட்டத்தட்ட 100 விமானங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவானது. சில விமானங்கள் 5 மணி நேரம் வரையில் தாமதமாகலாம் என்றும் கூறப்படுகிறது. மட்டுமின்றி, இதுவரை 21 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
பர்மிங்காம் விமான நிலையமானது பிரித்தானியாவின் ஏழாவது பெரிய விமான நிலையமாகும். லண்டனுக்கு வெளியே மூன்றாவது பெரிய விமான நிலையமாகும். 2023ல் மட்டும் 11.5 மில்லியன் பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயண்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |