புடின் பழிவாங்கப்பட வேண்டும்... நஞ்சால் கொல்லப்பட்ட நவால்னியின் மனைவி உருக்கம்
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி நஞ்சால் கொல்லப்பட்டது அம்பலமான நிலையில், இதற்கு காரணமான புடின் பழிவாங்கப்பட வேண்டும் என நவால்னியின் மனைவி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
புடின் கொன்றார்
நவால்னியின் மரணம் நியூரோடாக்சின் எபிபடிடின் காரணமாக இருக்கலாம் என்பதை நிறுவியதற்காக பிரித்தானியா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு யூலியா நவல்னயா நன்றி தெரிவித்துள்ளார்.

நவால்னி கொல்லப்பட்ட இந்த விஷமானது இயற்கையில் ஈக்வடார் டார்ட் தவளையின் தோலில் மட்டுமே காணப்படுகிறது. அதை உட்கொண்டால் பக்கவாதம் மற்றும் சுவாசத்தடை போன்ற வலிமிகுந்த மரணத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில், முதல் நாளிலிருந்தே தமது கணவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது என்பது தனக்கு உறுதியாகத் தெரிந்தது என்றும், ஆனால் தற்போது அதற்கான ஆதாரம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள யூலியா, அலெக்ஸியை ரசாயன ஆயுதத்தால் புடின் கொன்றார் என தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டு ஆண்டுகளாக அவர்கள் மேற்கொண்ட நுணுக்கமான பணிக்காகவும், உண்மையை வெளிக்கொணர்ந்ததற்காகவும் ஐரோப்பிய நாடுகளுக்கு நான் நன்றியுள்ளவளாக இருப்பேன் என்றும், புடின் ஒரு கொலைகாரர் என்றும் அவர் செய்த அனைத்து குற்றங்களுக்கும் அவர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் யூலியா கோரியுள்ளார்.
சனிக்கிழமையன்று, ஸ்வீடன், ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து பிரித்தானியாவும், 47 வயதான நவால்னியைக் கொன்றதாக ரஷ்ய அரசு மீது குற்றம் சாட்டினர்.

அரசியல் அச்சுறுத்தல்
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரான நவால்னிக்கு சந்தேகத்திற்குரிய மோசடி குற்றச்சாட்டில் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரது மரணத்தை ரஷ்ய அரசு பிப்ரவரி 16, 2024 அன்று அறிவித்தது.
அந்த நேரத்தில், நவால்னி முன்வைத்த அரசியல் அச்சுறுத்தல் காரணமாக ரஷ்ய அரசாங்கம் அவரைக் கொலை செய்ததாக அவரது சகாக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் தற்போது ஐந்து நாடுகளும் வெளியிட்டுள்ள தங்கள் கூட்டறிக்கையில், தென் அமெரிக்க டார்ட் தவளைகளுடன் தொடர்புடைய ஒரு நச்சுப்பொருளான எபிபடிடினின் தடயங்கள் நவால்னியின் உடலில் இருப்பதை ஆய்வக பகுப்பாய்வில் கண்டறியப்பட்டதாக உறுதி செய்தன.

ஆனால், நவால்னி இயற்கையாக மரணமடைந்ததாகவே ரஷ்யா கூறியது. அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ இந்த அறிக்கை தொடர்பில் குறிப்பிடுகையில், எபிபடிடின் என்பது ஒரு இரசாயன ஆயுதமாக வகைப்படுத்தப்படுகிறது, இது மார்பினை விட 200 மடங்கு வலிமையானது என்றும் பக்கவாதம், சுவாசக் கோளாறு மற்றும் மரணத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பிட்டுள்ளார்.
ஆனால், இப்படியான நஞ்சானது எவ்வாறு நவால்னிக்கு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் தகவலேதும் வெளியாகவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |