25 வயதில் 485 கோடிக்கு சொத்து... கட்டை விரல் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்: நீடிக்கும் மர்மம்
இந்திய மாநிலம் கேரளாவில் கோடிக்கணக்கில் மதிப்பிலான பிட்காயின் பரிவர்த்தனை தொடர்பில் கொல்லப்பட்ட 25 வயது இளைஞரின் வழக்கில் இதுவரை எந்த துப்பும் துலங்காமல் பொலிசார் தடுமாறி வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் பிட்காயின் பரிவர்த்தனை முன்னெடுத்து வந்த 25 வயதான அப்துல் ஷுக்கூர் என்பவர் கொல்லப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையிலும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என கூறப்படுகிறது.
2019 ஆகத்து 29ம் திகதி மர்ம நபர்களால் கடத்தப்பட்டு அப்துல் ஷுக்கூர் உத்தரகாண்ட் மாநிலத்தின் டெராடூன் நகரில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஷுக்கூர் தலைமையில் 485 கோடி மதிப்பிலான பிட்காயின் பரிவர்த்தனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிட்காயின் பரிவர்த்தனை தொடர்பிலான பிரச்சனையில் ஷுக்கூர் கொல்லப்பட்டதாகவே தெரிய வந்துள்ளது.
பிட்காயின் பரிவர்த்தனையால் ஈட்டிய கோடிக்கணக்கான தொகையை ஷுக்கூர் என்ன செய்தார் என்பது தொடர்பில் இதுவரை தெளிவான தகவல் இல்லை. ஷுக்கூர் பயன்படுத்திய மடிக்கணினியின் கடவுச்சொல்லாக அவரது கட்டை விரல் கை ரேகைகளே பயன்படுத்தி வந்துள்ளார்.
ஆனால் அவரது சடலம் மீட்கப்பட்ட போது, கட்டை விரல் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. ஷுக்கூர் கொலை தொடர்பில் டெராடூன் பொலிசார், குற்றவாளிகளை கைது செய்திருந்தும், பிட்காயின் பரிவர்த்தனை தொடர்பில் விசாரணை தடுமாறியது.
ஷுக்கூர் கொலை வழக்கு தொடர்பில் அவரது சொந்த ஊரில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் பொலிசார் உரிய விசாரணை முன்னெடுக்கவில்லை என்றே, ஷுக்கூரின் தாயாரும் உறவினர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மட்டுமின்றி, டெராடூன் பொலிசார் கைது செய்துள்ள குற்றவாளிகளை கேரளா பொலிசார் சந்திக்கவோ விசாரிக்கவோ இல்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.