உலக அழகிப்போட்டியில் 3வது இடம் பிடித்த தமிழ் பெண் தனுசியா செட்டி
malasiyan tamil taanusiya chetty as 2nd runner up in 2026 miss world: மலேசியாவை சேர்ந்த தமிழ் பெண்ணான தனுசியா செட்டி உலக அழகிப்போட்டியில் 3வது இடம் பிடித்தார்.
2026 உலக அழகிப் போட்டி
வியட்நாமின் நஹா ட்ராங் நகரில் செப்டம்பர் 5 ஆம் திகதி, 2026ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டியான 73 வது மிஸ் வேல்ட் 2026 கிராண்ட் ஃபினாலே நடைபெற்றது.
110 நாடுகளை சேர்ந்த பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், இறுதிசுற்றில் வெற்றி பெற்ற டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா உலக அழகியாக மகுடம் சூட்டப்பட்டார்.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எலிசபெத் ரெயினாஸ் அலபெர்ன் முதல் ரன்னர்-அப்பாகவும், மலேசியாவின் தனுசியா செட்டி இரண்டாவது ரன்னர்-அப்பாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
மாலை நேர கவுன் பிரிவின் போது, வியட்நாமிய ஆடை வடிவமைப்பாளர் மின் துவான் கோச்சர் வடிவமைத்த இளஞ்சிவப்பு கவுனில் தனுசியா செட்டி காட்சியளித்தார்.

3வது இடம் பிடித்த தனுசியா செட்டி
26 வயதான தனுசியா செட்டி, மலேசியாவில் பிறந்து, வசித்து வரும் தமிழ் பெண் ஆவார்.

மலாய், ஆங்கிலம், மாண்டரின் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசும் புலமையுடைய தனுசியா, தற்போது மேலாண்மை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்பித்தல் (TESL) பிரிவில் இளங்கலை கல்வியியல் படித்து வருகிறார்.
2022 ஆம் ஆண்டில், 'Be The Change Malaysia' என்ற அமைப்பை நிறுவிய தனுசியா, அதன் மூலம் சுகாதார மற்றும் கல்வி அமைச்சகங்களுடன் இணைந்து பழங்குடியினக் குழந்தைகளுக்காகச் செயல்படுத்தப்பட்ட 'மருத்துவமனையிலேயே பள்ளி' திட்டம் உட்பட, குழந்தைகள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கிய திட்டங்களில் பணியாற்றியுள்ளார்.
ஆட்டிசம் பாதித்த இளைஞர்களுக்கான கலைப் பட்டறைகள் நடத்துவது, குழந்தைப் பருவ இரத்தப் புற்றுநோய் நோயாளிகளைச் சந்திப்பது ஆகிய செயல்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார். இந்தப் பணி இதுவரை சுமார் 8,000 குழந்தைகளைச் சென்றடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், 2028 ஆம் ஆண்டுக்குள் உலக அழகி அமைப்புடன் இணைந்து, இந்தத் தளத்தை சர்வதேச அளவில் மேலும் கொண்டு செல்லவும் அவர் விரும்புகிறார்.

முன்னதாக, மிஸ் வேர்ல்ட் மலேசியா 2024 போட்டியில் போட்டியிட்ட அவர், மிஸ் வேர்ல்ட் மலேசியா 2024 ஆக முடிசூட்டப்பட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |