மலேசியா உருவான வரலாறு.., முழு விவரங்கள் உள்ளே
தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள மலேசியா நாட்டின் வரலாறு பற்றிய தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த நாடானது உலகின் முக்கியமான கடல் போக்குவரத்துப் பாதையில் இருப்பதால் பல்வேறு வணிக செயல்பாடுகளுக்கு முக்கியமாக இருந்து வருகிறது.
மலேசியாவின் எல்லைகள்
மலேசியா நாடானது 13 மாநிலங்களையும், 3 நடுவண் மண்டலங்களையும் கொண்டுள்ளது. இந்த நாடு, தென்சீனக் கடலினால் மலேசியத் தீபகற்பம், கிழக்கு மலேசியா என்று பிரிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், மலேசியத் தீபகற்பத்தின் வடக்கே தாய்லாந்து நாட்டுடன் நிலம் மற்றும் கடல் எல்லைகளையும், தெற்கே சிங்கப்பூர் நாட்டின் கடல் எல்லைகளையும், வடகிழக்கே வியட்நாம் நாட்டின் கடல் எல்லைகளையும், மேற்கே இந்தோனேசியா நாட்டின் கடல் எல்லைகளையும் கொண்டுள்ளது.
அதேபோல், மலேசியாவின் கிழக்கு மலேசியா பகுதியானது புரூணை, இந்தோனேசியா நாடுகளுடன் நில, மற்றும் கடல் எல்லைகளையும் மற்றும் பிலிப்பைன்ஸ், வியட்நாம் நாடுகளுடன் நில எல்லைகளையும் கொண்டுள்ளது.
மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூர் ஆகும். அதேபோல நடுவண் அரசின் நிர்வாக தலைநகரம் புத்ராஜெயா ஆகும்.
மக்கட்தொகை மற்றும் மொழி
மலேசியாவில் மொத்தம் 34 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இது உலகிலேயே 44-வது மக்கள் அதிகம் உள்ள நாடாகும். மலேசியாவின் மொத்த பரப்பளவு 330,803 சதுர கிமீ ஆகும்.
இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் மலாய் மக்கள் தான். இவர்களை அடுத்து சீனர்களும், இந்தியர்களும் உள்ளனர். இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றுகிறார்கள்.
மலேசியாவின் தேசிய சமயம் இஸ்லாம் மற்றும் தேசிய மொழி மலாய் மொழி ஆகும்.
வரலாறு
ஐக்கிய ராஜ்ஜியத்திடம் இருந்து 1957-ஆம் ஆண்டு மலேசியா விடுதலை பெற்றது. இந்நாட்டின் மன்னரை யாங் டி பெர்துவான் அகோங் என்று அழைக்கிறார்கள்.
வரலாற்றுக்கு முன்னதாக, 2 லட்சம் வருடங்களுக்கு முன்பு உள்ள கல் ஆயுதங்கள் புக்கிட் சாவாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதேபோல் அங்குள்ள குகைகளில் 40000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எச்சங்கள் காணப்படுகின்றன.
கி.மு முதல் நூற்றாண்டில் முற்பகுதியில் இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வந்த வணிகர்களும் குடியேற்றக்காரர்களும் வணிகத் துறைமுகங்களையும் நகரங்களையும் உருவாக்கினர்.
அதேபோல, பிற்பகுதியில் சிறீ விசயப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்தது. இதையடுத்து, சோழர்களின் வருகை மற்றும் போர்களால் சிறீ விசய ஆட்சி வலுவிழந்தது.
பின்னர், 15-ம் நூற்றாண்டில் பல்வேறு சுல்தான்கள் ஆட்சி செய்தார்கள். மலாயா தீபகற்பத்தின் முதல் சுதந்திர ராஜ்ஜியமாக கருதப்படும் மலாக்கா சுல்தானகத்தை நிறுவிய காலகட்டத்தில் இஸ்லாமிய சமயம் பரவியது. அப்போது தான், முக்கிய வாணிப மையமாக மலாக்கா விளங்கியது.
பிரித்தானியர் ஆதிக்கம்
இதையடுத்து, 1511-ஆம் ஆண்டில் மலாக்கா போர்த்துக்கீசர் வசமாகவும், 1641-ஆம் ஆண்டில் இடச்சுக்காரர் வசமாகவும் இருந்தது. பின்னர், 1786-ஆம் ஆண்டில் பிரித்தானியப் பேரரசு மலாயாவில் காலூன்றியது.
இதனிடையே, 1819-ஆம் ஆண்டில் சிங்கப்பூரை பிரித்தானிய அரசு கைப்பற்றியது. 1826-ஆம் ஆண்டில் சிங்கப்பூர், மலாக்கா உள்ளிட்ட நாடுகளை தமது குடியேற்ற நாடுகளாக்கினர்.
இதனை எதிர்த்த மலாய் மக்கள் சில போராளிகள் தலைமையில் கொரில்லாப் போர் நடத்தினர். இதன்பிறகு, 1957, ஆகஸ்ட் 31 அன்று விடுதலை அடைந்து 1963 -ம் ஆண்டில் மலேசிய நாடாக உருவாகியது.
இதையடுத்து, 1965-ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்து தனிநாடாக மாறியது. தற்போது, மலேசியா உலகின் மிக முன்னணி பொருளாதார நாடுகளின் ஒரு பகுதியாக விளங்குகிறது.
மேலும், தொழில்நுட்பம், வர்த்தகம், சுற்றுலா மற்றும் கல்வி போன்ற பல்வேறு துறைகளில் முன்னணி நாடாக உள்ளது.
மலேசியாவின் வரலாற்று பின்னணி, அதன் மக்கள், கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் முறை ஆகியவை உலகில் முக்கியமான இடம் வகிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |