நீல நிறமாக மாறிய நதி நீர்... அரிய மண் தாதுக்கள் பணிகளை நிறுத்திய நாடு
மலேசியாவில் பெரிய நதியின் ஒரு பகுதி பிரகாசமான நீல நிறமாக மாறியதாக எழுந்த புகார்கள் மீதான விசாரணையைத் தொடர்ந்து அரிய மண் தொடர்பான சுரங்க வேலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
மிக நீளமான நதி
மலேசியாவின் மேற்கு பேராக் மாகாணத்தில் உள்ள ஒரு அரிய மண் தளம் மற்றும் இரண்டு தகர சுரங்கங்களில் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பேராக் நதியின் ஒரு பகுதியில் தண்ணீர் நிறம் மாறியதாக பொதுமக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அமைச்சர் ஜோஹாரி அப்துல் கானி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மலேசிய தீபகற்பத்தில் இரண்டாவது மிக நீளமான நதி பேராக். இந்த நிலையில், முதற்கட்ட விசாரணையில் MCRE Resources Sdn Bhd நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் அரிய மண் சுரங்கத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நதி நீர் நிறம் மாறியதாக உறுதி செய்யப்பட்டது.
மட்டுமின்றி, அந்த இடத்தில் கதிர்வீச்சு அளவீடுகள் 13 பெக்கரெல்கள் வரை அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டது. திட்டத்தின் ஆரம்ப சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் கீழ் அனுமதிக்கப்பட்ட 1 பெக்கரல் வரம்பை விட இது மிக அதிகமாகும்.
சுரங்கச் செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களின் வகை மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட தகவல்களுடன் அது ஒத்துப்போகிறதா என்பது குறித்து விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் ஜோஹாரி தெரிவித்துள்ளார்.
ஆனால், அரிய மண் சுரங்கத்தில் சீனா இதுவரை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தையே MCRE நிறுவனமும் பயன்படுத்தி வருவதாக அந்த நிறுவனத்தின் இணைய பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவுடன் இணைந்து
மலேசியாவில் 16 மில்லியன் டன் அரிய மண் படிவுகள் காணப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், தாதுக்களுக்கான அதிகரித்து வரும் உலகளாவிய தேவையைப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது.

ஆனால், அவற்றை வெட்டி எடுத்து செயலாக்க தொழில்நுட்ப வசதிகள் இல்லை. இந்த நிலையில் சீனாவுடன் இந்த விவகாரத்தில் இணைந்து செயல்பட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அத்துடன் கடந்த மாதம் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளது. தற்போது MCRE மற்றும் இரண்டு தகரம் சுரங்க நிறுவனங்களுக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |