எங்கள் நாட்டுக்கு வராதீர்கள்... சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக நாடொன்றில் வெடித்த கலவரம்
பல நாடுகளில், நாட்டின் வருவாய்க்கு முக்கிய காரணிகளில் ஒன்று சுற்றுலா என்னும் நிலை காணப்படுகிறது.
ஆனால், பெருந்திரளாக சுற்றுலாப்பயணிகள் தங்கள் ஊர்களுக்கு வருவதை சில நாடுகளில் உள்ளவர்கள் தொல்லையாக நினைக்கிறார்கள்.
சுவிட்சர்லாந்து உட்பட பல நாடுகளில் ஆங்காங்கே சுற்றுலா எதிர்ப்பு குறித்த செய்திகள் வெளியாகிவரும் நிலையில், நாடொன்றின் மக்கள் சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட விடயம் கலவரத்தில் முடிந்துள்ளது.
எங்கள் நாட்டுக்கு வராதீர்கள்...
ஆம். நேற்று மாலை, ஸ்பெயினுக்கு சொந்தமான மஜோர்க்கா தீவின் தலைநகரான பால்மாவில் 25,000க்கும் அதிகமான பொதுமக்கள் சாலைகளில் கூடி சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஒரு கட்டத்தில், பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்த, கூட்டத்தில் சிலர் தடையை மீற முயல, பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களும் இடையே மோதல் வெடித்தது.
பொலிசார் தடியடி நடத்தியதுடன், ஒரு கட்டத்தில் கூட்டத்தினரை நோக்கி ரப்பர் குண்டுகளை சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருதரப்பினரும் மோதிக்கொண்டதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும், பொலிசாரும் ஆர்ப்பாட்டக்காரர்களும் மோதிக்கொள்வதையும் காட்டும் ஏராளமான காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிவருகின்றன.

சுற்றுலாப்பயணிகள் வராதீர்கள், சுற்றுலாப்பயணிகளே திரும்பிச் செல்லுங்கள், மஜோர்க்காவை காப்பாற்றுங்கள், சுற்றுலாவால் பேரழிவு, எனக்கூறும் பதாகைகளை மக்கள் ஏந்தியிருந்தையும் காணமுடிகிறது.

விடயம் என்னவென்றால், இப்படி சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக மஜோர்க்கா மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. கடந்த மூன்று ஆண்டுகளாக, கோடையின்போது இதேபோல் சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |