இந்த நாட்டின் golden passport திட்டம் சட்டவிரோதம்... தீர்ப்பளித்த ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்
நிதி முதலீடு மூலம் செல்வந்தர்களை குடிமக்களாக மாற்ற அனுமதிக்கும் மால்டாவின் தங்க கடவுச்சீட்டு திட்டம் ஐரோப்பிய சட்டத்திற்கு முரணானது என ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வணிகப் பரிவர்த்தனையாக
இந்தத் திட்டம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் 2022 இல் மால்டா மீது நீதிமன்ற விசாரணையை முன்னெடுத்தது. மால்டாவின் தங்க கடவுச்சீட்டு திட்டமானது வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்குவதுடன், எந்த ஐரோப்பிய ஒன்றிய நாட்டிலும் வாழவும் வேலை செய்யவும் உரிமை அளிக்கிற5து.
தங்க கடவுச்சீட்டுக்கு ஈடாக 10,000 யூரோ தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளிக்க வேண்டும் என்பதுடன், 600,000 யூரோ தொகையை செலுத்த வேண்டும் அல்லது அதே அளவு தொகைக்கு குத்தகைக்கோ அல்லது சொந்தமாகவோ மால்டாவில் சொத்து வாங்க வேண்டும்.
இந்தத் திட்டம் குடியுரிமையைப் பெறுவதை வெறும் வணிகப் பரிவர்த்தனையாக மாற்றுவதற்குச் சமம் என்றே ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
முன்னாள் பிரதமர் ஜோசப் மஸ்கட் இது அப்பட்டமான அரசியல் என்று குறிப்பிட்டுள்ள நிலையில், இந்த தீர்ப்புக்கு மால்டா அரசாங்கம் இன்னும் பதிலளிக்கவில்லை. இந்தத் திட்டமானது சில மாற்றங்கலுடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்றே ஜோசப் மஸ்கட் தெரிவித்துள்ளார்.
பரஸ்பர நம்பிக்கையை பாதிக்கிறது
ஆனால் நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றாவிட்டால் மால்டா மிகப்பெரிய அபராதங்களை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது. 2022 ல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்ய மற்றும் பெலாரஸ் நாட்டினருக்கு இந்த திட்டம் மறுக்கப்பட்டது.
ஒவ்வொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடும் தாங்கள் எவ்வாறு குடியுரிமை வழங்குவது என்பதைத் தீர்மானிக்கிறது என்றாலும், மால்டாவின் திட்டம் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கையை பாதிக்கிறது என்றே நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் இதுபோன்ற தங்க கடவுச்சீட்டு திட்டங்களை கைவிட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |